‘தி கேரளா ஸ்டோரி’க்கு பிரதமர் மோடி ஆதரவு – படத்தை தடை செய்யுமாறு காங். போராடுவது ஏன் என கேள்வி

தீவிரவாதத்தின் கொடூரமான உண்மை முகத்தை வெளிப்படுத்தும் விதமாக தி கேரளா ஸ்டோரி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் வரும் 10-ந் தேதி சட்டப் பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் அங்கு…

தீவிரவாதத்தின் கொடூரமான உண்மை முகத்தை வெளிப்படுத்தும் விதமாக தி கேரளா ஸ்டோரி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் வரும் 10-ந் தேதி சட்டப் பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் அங்கு பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பெல்லாரியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.

அப்போது அவர்,  தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். தி கேரளா ஸ்டோரி பயங்கரவாத சதியை அம்பலப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, தீவிரவாதத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவதுடன், தீவிரவாதிகள் உருவாகும் விதத்தை அம்பலப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

தீவிரவாதம் பற்றிய படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். வாக்கு வங்கி அரசியலுக்காக பயங்கரவாதத்தை ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சியா  கர்நாடகத்தை காக்கப்போகிறது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போதெல்லாம் காங்கிரசுக்கு வயிறு வலிக்கிறது. அதனால் தான் தீவிரவாதத்துக்கு எதிரான படத்தை தடை செய்ய காங்கிரஸ் போராடி வருகிறது என்று கூறிய பிரதமர் மோடி, தீவிரவாதத்திற்கு எதிராக பாஜக எப்போதும் கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.