கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் இருந்துதான் பரவியது என யூகிக்க முடியவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 6 கோடிக்கும் அதிமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 14 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே இந்த வைரஸ் பரவலுக்கு சீனா தான் காரணம் எனவும் சீனா மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதேபோல் சில ஐரோப்பிய நாடுகளும் சீனாவின் மீது சந்தேக கேள்வி எழுப்பியதை தொடர்ந்து வைரஸ் பரவல் தொடர்பாக விசாரணை நடத்த உலக சுகாதார அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் உயர் அவசர நிபுணர் மைக் ரியான், கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் தோன்றியது என்பதை யூகிக்க முடியவில்லை என தெரிவித்தார். நோய் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் கொரோனா பரவல் தொடர்பான விசாரணையை மேற்கொள்வது என்பது ஒரு போதுவான நடவடிக்கை அதனால் தான் சீனாவில் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.







