மடிக்கும் வகையிலான ஆப்பிள் ஐபோன்கள் 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் முன்னணி ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் ஒவ்வொரு ஆண்டும் புதிய மாடல் ஐபோன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் விலை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் இதனை விரும்பி வாங்குவதற்கு சிலர் காத்திருக்கிறார்கள். அந்தவகையில் தற்போது மடிக்கும் வகையிலான ஐபோன்களை தயாரிப்பதற்கான வேலைகளில் அந்நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தேவையான உதிரி பாகங்களுக்காக Hon Hai மற்றும் Nippon Nippon ஆகிய நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த ஐபோனில் OLED அல்லது MicroLED திரை இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான டிஸ்ப்ளே பேனலை சாம்சங் நிறுவனம் அளிக்கவிருக்கிறது. மடிக்கக் கூடிய வகையிலான ஐபோன்களை அறிமுகம் செய்வதற்கான பரிசோதனையில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இதனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சில நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் இந்த ஐபோன் தயாரிக்கபடவிருக்கிறது. லட்சக்கணக்கான சோதனை செய்து, அதன் உழைக்கும் திறனை முடிவு செய்த பிறகே இது சந்தைக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் மடிக்கும் வகையிலான ஸ்மார்ட்போன்களை கடந்த ஆண்டே அறிமுகம் செய்தது. இருப்பினும் ஆப்பிள் ஐபோன்களுக்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதால் இதனை எதிர்பார்த்து ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.







