ஆணவப் படுகொலைகள் வழக்குகள் பூஜ்ஜியம் – சமூக ஆர்வலர்கள் சந்தேகம்; அதிர்ச்சி தரும் RTI தகவல்!

தென் தமிழ்நாட்டில் SC/ST வழக்குகள் அதிகரித்துள்ளன. 4.5 ஆண்டுகளில் 3041 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக RTI தகவல் அளித்துள்ளது.

 

கடந்த 4.5 ஆண்டுகளில் (2020-2025 ஜூன்) தென் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட பட்டியல் சாதி, பழங்குடியினர் (SC/ST) வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளின் விவரங்கள் அதிர்ச்சி அளிப்பதாக ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) பதில் மூலம் தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் கோரியிருந்தார்.

தென் தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் மொத்தம் 3041 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாக மதுரை மாவட்டம் 514 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. தேனி (465) மற்றும் புதுக்கோட்டை (440) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த புள்ளிவிவரங்கள், இந்த மாவட்டங்களில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதை வெளிப்படுத்துகின்றன.

பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், 509 வழக்குகள் “உண்மையற்றவை” (Mistake of fact) எனக் கூறி ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில், புதுக்கோட்டை மாவட்டம் 124 வழக்குகளை ரத்து செய்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக தேனி (97) மற்றும் சிவகங்கை (74) மாவட்டங்கள் உள்ளன.

காவல்துறையால் முறையாக விசாரணை செய்யப்படாமல், பல வழக்குகள் “உண்மையற்றவை” எனக் கூறி ரத்து செய்யப்படுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் உள்ள சவால்களைக் காட்டுகிறது. இதனால், பல உண்மையான புகார்களும் நீர்த்துப் போக வாய்ப்புள்ளது.

இந்த 4.5 ஆண்டு காலத்தில் சாதிய ஆணவப் படுகொலைகள் (Honor killings) தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தென் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திலும் அப்படி ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என RTI பதிலளித்துள்ளது. ஆனால், பல சமூக ஆர்வலர்கள், தென் தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் நடந்திருக்கக்கூடும் என்றும், அவை வழக்குகளாகப் பதிவு செய்யப்படாமல் வேறு காரணங்களுக்காக மறைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.