விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரொமோ வீடியோ, வெளியான 24 மணி நேரத்திற்குள், 20 மில்லியன் பார்வைகளை கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. வாரிசு கொண்டாட்டத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள், தளபதி 67 படத்தின் அப்டேட்டிற்காக காத்துக் கொண்டிருந்தனர்.
இதனையடுத்து, தளபதி 67 படத்தில் த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. மேலும் நேற்று தளபதி 67 படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்தது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தளபதி 67 படத்தின் தலைப்பு ’லியோ’ என்று அறிவிக்கப்பட்டது. இதனை ப்ரொமோ வீடியோவாக வெளியிட்டு படக்குழு அறிவித்தது. மேலும், ஆயுத பூஜையை முன்னிட்டு, அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இந்த ப்ரொமோ வீடியோ, வெளீயான 24 மணி நேரத்திற்குள், யூடியூபில் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும், இது யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.







