நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்ற புரிதல் பிரதமருக்கு இல்லை-ராகுல் குற்றச்சாட்டு

நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்ற புரிதல் பிரதமருக்கு இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் வரை பணியமர்த்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அக்னிபாத்…

நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்ற புரிதல் பிரதமருக்கு இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் வரை பணியமர்த்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அக்னிபாத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், அந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டத்தில் வன்முறையும் ஏற்பட்டது. தெலங்கானாவில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட வன்முறையில் ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. அப்போது ரயில்வே போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

செகந்திரபாத் ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் தீவைத்ததால் கொழுந்துவிட்டு எரியும் தீ.

இந்நிலையில் இதுகுறித்து ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

அக்னிபாத் திட்டத்தை இளைஞர்கள் நிராகரித்துள்ளனர். வேளாண் சட்டத்தை விவசாயிகள் நிராகரித்திருந்தனர். பணமதிப்பிழப்பை பொருளாதார நிபுணர்கள் மறுத்துவிட்டனர். சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறையை வர்த்தகர்கள் நிராகரித்தனர். நாட்டு மக்களுக்கு என்ன வேண்டும் என்பது குறித்த புரிதல் பிரதமர் நரேந்திர மோடிக்கு இல்லை. அவருடைய நண்பர்கள் கூறுவதைத் தவிர வேறு எதையும் அவர் காது கொடுத்து கேட்பதில்லை என்று டுவிட்டரில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசம், பீகார், ஹரியாணா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால், வடமாநிலங்களில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.