செலவுக்குப் பணம் இல்லை: கால் டாக்சி டிரைவரை கடத்திக் கொலை செய்த இளைஞர்கள்!

செலவுக்குப் பணம் இல்லாததால் கால் டாக்சி டிரைவரை கடத்தி இளைஞர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அருகே ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட வல்லம் பகுதியில் செங்கல்பட்டு- திருக்கழுகன்றம் பிரதான சாலையில் ஞாயிற்றுக்கிழமை…

செலவுக்குப் பணம் இல்லாததால் கால் டாக்சி டிரைவரை கடத்தி இளைஞர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அருகே ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட வல்லம் பகுதியில் செங்கல்பட்டு- திருக்கழுகன்றம் பிரதான சாலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சுமார் 2 மணிக்கு XYLO காரில் 4 பேர் கொண்ட கும்பல், சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரை கடத்தி வந்து நடுரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பியுள்ளது. தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினர் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு தலைமை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில், இறந்தவர் சென்னை மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம் அரசங்கழனி பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் என்பதும், இவர் பரங்கிமலை பாமக முன்னாள் ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் என்பதும், பகுதி நேரமாக சைலோ கார் வாடகைக்கு ஓட்டி வருவதாகவும் தெரியவந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் சைலோ காரை எடுத்துக்கொண்டு வேலைக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. காவல் துறை சார்பில் காரை கடத்துவதற்காக கொலை நடைபெற்றதா அல்லது முன்விரோதம் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைத் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் அச்சரப்பாக்கம் அருகே சந்தேகத்துக்கு இடமான கார் ஒன்று நின்று இருப்பது காவல் துறைக்கு தெரியவந்தது. அதன் பிறகு இந்த கார் கடத்தப்பட்ட கார் என்பதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகள், காரை இங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் மூன்று நபர்களை பெரம்பூரில் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம், காரியனூர், மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த், குட்டி முத்து, திருமூர்த்தி என்பது தெரியவந்தது. மூவரும் சென்னையில் தங்கி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மூட்டை தூக்குவது உள்ளிட்ட பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். எவ்வளவு வேலை செய்தும் கையில் பணமில்லாமல், ஊருக்குச் செல்வதற்கு வழி இல்லாமல் சுற்றித் திரிந்து வந்துள்ளனர். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திருவிக நகரில் உள்ள நகைக் கடை ஒன்றை கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டியுள்ளனர். ஆனால், அந்த திட்டத்தை திடீரென கைவிட்டுவிட்டு காரை புக் செய்து கடத்தலாம் என திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன் அடிப்படையில் முதலில் ஒரு காரை புக் செய்து வண்டலூர் வரை வந்துள்ளனர். ஆனால், அதை கடத்த முடியாமல் போய் உள்ளது. இதையடுத்து தான் சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனனின் காரை புக் செய்துள்ளனர். காரில் ஏறியவுடன் ஓட்டுனர் அர்ஜுனனை கத்தியைக் காட்டி மிரட்டி பல இடங்களில் குத்தி கிழித்துள்ளனர். இதையடுத்து அர்ஜுனனை கொலை செய்து செங்கல்பட்டு சாலையில் வீசிவிட்டு காரை கொண்டு சென்றுள்ளனர்.

காரில் டீசல் இல்லாமல் மேல்மருவத்தூர் அடுத்துள்ள அச்சரப்பாக்கம் அருகே நின்றுள்ளது. அங்கேயே காரை நிறுத்திவிட்டு அர்ஜுனனிடம் இருந்து பறித்து வந்த பணத்தை வைத்து பேருந்து நிலையத்துக்குச் சென்றுள்ளனர். இக்கொலையில் மேலும் இருவர் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்ய காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.