பிப்.10ல் இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம் – அன்புமணி தரப்பு பாமக அறிவிப்பு…!

பாமகவின் இளைஞரணி பொதுக்குழுக் கூட்டமானது வரும் 10-ஆம் தேதி நடைபெறும் என்று அன்புமணி தரப்பு அறிவித்துள்ளது.

பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறார். இதனால் இரு தரப்பினரும் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி இரு தரப்பினரும் தனி தனியாக விருப்பமனுக்களும் பெற்றனர்.

இந்த சூழலில் அன்புமணி தரப்பு பாமகவானது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. இதற்கு ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் மாம்பழம் சின்னத்தை அன்புமணி தரப்பிற்கு வழங்கிய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையையும் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார்.

இந்த நிலையில் வரும் 10-ஆம் தேதி இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அன்புமணி தரப்பு பாமக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ”பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம் வரும் 10-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெறும். இளைஞரணித் தலைவர் முனைவர் கணேஷ்குமார் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.

பாமக இளைஞரணியின் வளர்ச்சி, ஆண்டு செயல்திட்டம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். பாமக இளைஞரணியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.