சேலத்தில் தக்காளி திருடிய இளைஞர் கைது

சேலத்தில் தக்காளி திருடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்து வந்த நிலையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ 100…

சேலத்தில் தக்காளி திருடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்து வந்த நிலையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ 100 ரூபாயை எட்டியது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி திருட்டு அதிக அளவில் நடைபெற்று வந்ததுள்ளது. குறிப்பாக இளம்பிள்ளை பெருமாகவுண்டம்பட்டி புதுரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த ஒருவாரமாக தக்காளி அதிக அளவில் திருட்டு போனது.

இந்த நிலையில் பெருமாகவுண்டம்பட்டியில் உள்ள ஒரு மளிகை கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது டிப்டாப்பாக ஒரு இளைஞர் ஸ்கூட்டரில் வந்து கடை முன் வைத்திருந்த தக்காளி பெட்டியை எடுத்து செல்லும் காட்சி பதிவானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதுதொடர்பாக கடை உரிமையாளர்கள் சேலம் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு தேடியதில் வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த சின்ராஜ் என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில் இவர் ஏற்கனவே சேலம் செவ்வாய்பேட்டையில் ஆப்பில் திருடிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தது தெரியவந்தது. தொடர்ந்து இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தக்காளி திருடிய இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.