இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு நிறைவு பெறாமல் விடுபட்ட ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த ஆட்டம் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
மேலும், டி20, ஒரு நாள் தொடர்களிலும் இந்தியா, இங்கிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு நடத்த முடியாமல் விடுபட்ட ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டம் இன்று பர்பிங்ஹாமில் தொடங்கியது.
கேப்டனாக பந்துவீச்சாளர் பும்ரா பொறுப்பேற்றுள்ளார். ரோஹித் சர்மா கொரோனாவிலிருந்து மீண்டு வராத காரணத்தால் பும்ரா கேப்டன் பொறுப்பை கவனிக்கிறார்.
ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா தொடக்கம் முதலே சற்று தடுமாறியது. வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற மைதானமான பிர்மிங்ஹாமில், சுபமன் கில், புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோர் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
முன்னாள் கேப்டன் கோலியும் 11 ரன்களில் ஆட்டமிழக்க ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அடுத்து களம் கண்ட விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நிதானமாக விளையாடி அரை சதம் பதிவு செய்தார்.
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்களையும் ரிஷப் பண்ட் கடந்தார். ஒரு பக்கம் ஸ்ரேயஸ் ஐயர் 15 ரன்களில் ஆட்டமிழக்க ஜடேஜா, ரிஷப் பண்டுக்கு தோள் கொடுத்து வருகிறார்.
இருவரும் இணைந்து 100 ரன்களைக் கடந்தனர். 54 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இங்கிலாந்து தரப்பில் அனுபவமிக்க ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர்கள்.
- எம்.எஸ்.தோனி- 4876 ரன்கள்
- சையது கிர்மானி-2759 ரன்கள்
- பரோக் என்ஜீனியர்-2611 ரன்கள்
- ரிஷப் பண்ட்-2006 ரன்கள்
- நயன் மோங்கியா-1442 ரன்கள்
-மணிகண்டன்








