பிரசவத்தின் போது தவறான அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மாற்று சிகிச்சை செய்யாமல், மருத்துவமனையில் இருந்து வெளியேற்றியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.
திருவாரூர், நன்னிலம் அருகே திருவாஞ்சியம் உடையார் குளம் தெருவில்,
சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆதியன் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில்
உள்ள மாரிமுத்து, அஞ்சம்மாள் தம்பதியருக்கு இரண்டு மகன்கள் மற்றும் 20 வயதுடைய முத்துலட்சுமி என்ற பெண் உள்ளார். முத்துலட்சுமியை தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி பகுதியில், முத்து என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மே மாதம் 3 தேதியன்று திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முத்துலட்சுமி பிரசவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்
முத்துலட்சுமிக்கு சுகபிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும், அறுவை சிகிச்சை செய்த போது, சிறுநீர் மற்றும் மலம் போகும் வழியை சேர்த்து தைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இயற்கை உபாதைக்கு செல்வதில் முத்துலட்சுமிக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
முத்துலட்சுமிக்கு குழந்தை பிறந்தும், மருத்துவர்கள் காரணம் ஏதும் சொல்லாமல் 22
நாட்களாக மருத்துவமனையிலேயே வைத்துள்ளனர். இதுகுறித்து மருத்துவர்களிடம்
கேட்ட போது, இருதய பிரச்சனை காரணமாக தங்க வைத்துள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.
மேலும், முத்துலட்சுமியின் பிரச்சனை குறித்து மருத்துவர்களிடம் கேட்டபொழுது, இதற்கான மருத்துவர்கள் இல்லை எனக் கூறி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள் என, மேல் சிகிச்சைக்கான எந்த ஒரு வழிமுறையையும் கூறாமல், மருத்துவமனையில் இருந்து முத்துலட்சுமியை வலுக்கட்டாயமாக டிசார்ஜ் செய்துள்ளனர். இவர் தற்பொழுது, திருவாஞ்சியம் தாய் வீட்டில் பிறந்த பச்சிளம் குழந்தையுடன் மிகவும் சிரமத்துடன் இருந்து வருகிறார்.
திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களின் அலட்சிய போக்கால் முத்துலட்சுமி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட தன் மகளை காப்பாற்றித் தருமாறு முத்துலட்சுமியின் தந்தை மாரிமுத்து அரசிடம் கோரிக்கை வைத்தார்.
கு. பாலமுருகன்







