காவிரி நதிநீர் பிரச்னையில் நீ பெரியவனா, நான் பெரியவனா என்று பேசுவதை விட்டு விட வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் இன்று துரைமுருகன் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், காவிரி பிரச்னையில் அதிமுக இந்த தீர்மானத்தை கொண்டு வந்த போதெல்லாம் திமுக ஆதரித்துள்ளது. அதேபோன்று திமுக தீர்மானம் கொண்டு வந்த நேரத்தில் அதிமுகவும் ஆதரித்துள்ளது. சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர், நமக்குள் ஆயிரம் இருக்கலாம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது மேலும் பேசிய அவர், “யாராக இருந்தாலும் காவிரி பிரச்சினையில் நீ பெரியவனா, நான் பெரியவனா என்று பேசுவதை விட்டு விட வேண்டும் என்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு தண்ணீர் பெறுவதற்கே ஒரு பெரிய போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையே மதிக்கமாட்டேன் என்று ஒரு மாநிலம் சொன்னால் எங்கே இருக்கிறது Federalism? எங்கே இருக்கிறது கூட்டாட்சி?. இதை விட்டுவிட்டால் வருங்கால சமூகம் நம்மை காறித்துப்பும், சபிக்கும். மத்தியில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவை தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் நடத்தி வருகிறார்கள். இதை சட்டப்படிதான் எதிர்த்து போராட வேண்டும்” என்று பேசினார்.
இப்போதைய கர்நாடக முதல்வரின் தந்தை, ஜனநாயகத்தை காப்பாற்றியவர். அவரின் மகன், அந்த ஜனநாயகத்தை மதிப்பார் என்று கருதுகிறேன் என்று பேசிய அமைச்சர், எனக்கு இன்றும் நம்பிக்கை இருக்கிறது, கர்நாடக முதல்வர் அவரின் தந்தையைப் போல் நியாயத்தைத் தருவார் என்று நம்பிக்கையுடன் பேசினார். தொடர்ந்து, நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற அடிப்படையில் தீர்மானத்தை கொண்டுவருகிறேன் என்று கூறியபடி மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை துரைமுருகன் வாசித்தார்.