பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என திமுக எம்பி கனிமொழி மத்திய நிதியமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
பருத்தி நூல் விலை உயர்வு விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை திமுக நாடாளுமன்ற குழு துணைத் தலைவர் கனிமொழி தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, சண்முகசுந்தரம், எஸ்.ஆர்.பார்த்திபன், சின்ராஜ் ஆகியோர் அவரது அலுவலகத்தில் சந்தித்து நூல் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக வலியுறுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, பருத்தி நூல் விலை உயர்வு காரணமாக திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பின்னலாடை தொழில் முடங்கியுள்ளதாகவும், விவசாயத்திற்கு அடுத்ததாக ஜவுளி நிறுவனம் அதிக வேலை வாய்ப்புகளை தரும் தொழிலாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
பருத்தி நூல் விலை உயர்வு காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்படும் சூழல் உருவாகி உள்ளது என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்து எழுதியிருந்த கடிதத்தின் நகலையும் இன்று நேரில் நிதியமைச்சரிடம் வழங்கியதாகவும், இதுவரை 3 மாதங்களுக்கு வழங்கப்பட்டு வந்த “Crash Credit Limit” 8 மாதங்களுக்கு வழங்க கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வங்கிகளில் கடன் பெறுவதற்கு வழங்கப்படும் விளிம்பு தொகை என்பது 27% ஆக உள்ள நிலையில் அதனை 10%ஆக குறைத்து கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும், அது தொடர்பாக துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்ததாக கனிமொழி கூறினார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று செப்டம்பர் 30ம் தேதி வரை இறக்குமதிக்கான வரி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளதாகவும், அதனை செப்டம்பர் வரை கையெழுத்தாகி உள்ள அனைத்து ஒப்பந்தத்திற்கு பொருந்தக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்த போது நிதியமைச்சர் நிச்சயம் அதனை ஏற்று கொள்வதாகவும், பருத்தி ஏற்றுமதியை குறைத்து, இந்தியாவில் உள்ள ஆலைகளுக்கு போதிய காட்டன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும், அதனையும் துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.








