யமுனை நதியில் நீர்மட்டம் மீண்டும் அதிகரித்து வருவதால், மக்கள் நிவாரண முகாம்களிலேயே தங்குமாறும், வெள்ளத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனவும் டெல்லி அமைச்சர் அதிஷி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரபிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் வரலாறு காணாத அளவு மழை பெய்து வருகிறது. அதேபோல இமாச்சல பிரதேசத்தில் இடைவிடாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரவி, பியாஸ், சட்லுஜ், ஸ்வான் மற்றும் செனாப் உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குறிப்பாக டெல்லியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல இடங்கள், சாலைகள், பாலங்கள் நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன. ஏற்கெனவே யமுனை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர் மழை பெய்து வருவதால் டெல்லி அரசு மழையினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், ஹரியானாவின் சில பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் யமுனை ஆற்றில் நீர்மட்டம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் டெல்லியில் காலை 9 மணிக்கு 205.58 மீட்டராக இருந்த நீர்மட்டம் பிற்பகல் 12 மணி நிலவரப்படி 205.80 மீட்டராக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 207.49 மீட்டர் என்ற அளவில் இருந்த நீர் மட்டம், ஜூலை 12ஆம் தேதி 208 மீட்டரை கடந்தது, யமுனையில் தற்போதுவரை நீர் மட்டம் 205.33 மீட்டர் அபாய அளவிற்கு மேல் உள்ளது.
இதுதொடர்பாக டெல்லி அமைச்சர் அதிஷி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
கடந்த வாரம் வட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மாநிலத்தின் பல சாலைகளை மூழ்கடித்தது. இந்நிலையில், ஹரியானாவின் சில பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், யமுனையின் நீர்மட்டம் இன்று சற்று அதிகரித்து வருகிறது.
ஒரே இரவில் 206.1 மீட்டரை எட்டும் என்று மத்திய நீர் ஆணையம் மதிப்பிட்டுள்ளது. இதனால் டெல்லி மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால், நிவாரண முகாம்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் வீடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நீர் மட்டம் அபாயக் கட்டத்துக்குக் கீழே வந்த பின்னரே உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள். இவ்வாறு அவர் இந்தியில் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/AtishiAAP/status/1680832925967831040?s=20
- பி.ஜேம்ஸ் லிசா









