இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டம், மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும், நியூசிலாந்து அணியும் மோதி வருகின்றன. இந்தப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இரண்டாம் நாள் தொடர்ந்த போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், பந்து வீச்சை தேர்வு செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகப்பட்சமாக துணை கேப்டன் ரஹானே 49 ரன்களும் கேப்டன் விராத் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜாமீசன் 5 விக்கெட்டுகளையும் நீல் வாக்னர், டிரென்ட் போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும் டிம் சவுதி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
டாம் லாதமும் டிவோன் கான்வேவும் ஆட்டத்தைத் தொடங்கினர். லாதம் (30 ரன்) விக்கெட்டை அஷ்வினும், கான்வே (54 ரன்) விக்கெட்டை இஷாந்த் சர்மாவும் வீழ்த்தினர். மூன்றாம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து அணி, 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்தது. கேன் வில்லியம்சன் 12 ரன்களுடன் ராஸ் டெய்லர் ரன் கணக்கை தொடங்காமலும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடக்க இருந்தது. சவுத்தாம்டனின் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஒரு பந்து கூட வீசப்படாமல், இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.