உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட பிறகு, போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் சுப்மன் கில்லும் களமிறங்கினர். நிதானமாக ஆடிய இவர்களில் ரோகித் சர்மா 34 ரன்களிலும் சுப்மன் கில் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். புஜாரா, 8 ரன்கள் எடுத்த நிலையில், போல்ட் வேகத்தில் எல்பிடபிள்யூ ஆனார். கேப்டன் விராத் கோலியும் துணை கேப்டன் ரஹானேவும் பொறுப்போடு ஆட்டத்தைத் தொடங்கினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. விராத் கோலி 44 ரன்களுடனும் ரஹானே 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விராத் கோலி (44) ரன் கணக்கைத் தொடங்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வந்தார். அவரும் வந்த வேகத்தில் 4 ரன்களுடன் வெளியேற, ரஹானே தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவர் 49 ரன் எடுத்த நிலையில் அவருடைய விக்கெட்டை நீல் வாக்னர் எடுக்க, இந்திய அணி தடுமாறியது. அடுத்து வந்தவர்கள் யாரும் நிலைத்து நிற்காததால், முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இந்திய அணி இழந்தது.
நியூசிலாந்து தரப்பில் ஜாமீசன் 5 விக்கெட்டுகளையும் நீல் வாக்னர், டிரெண்ட் போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும் டிம் சவுதி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் லாதமும் டிவோன் கான்வேவும் களத்தில் உள்ளனர்.







