தெற்கு சீனாவில் ஷென்ஜென் விமான நிலையத்தில் பணி புரியும் பெண் ஊழியருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் சுமார் 450 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவியது. உலக அளவில் கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகள் தொடர்ந்து கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. இருப்பினும் சீனா கொரோனா பாதிப்புகளை பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வந்தது.
இந்நிலையில், தெற்கு சீனாவில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் ஷென்ஜென் விமான நிலையத்தில் பணிபுரிந்து வரும் 21 வயது பெண் ஊழியர் ஒருவருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 110 பேரை தனிமைப்படுத்தி கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். விமான நிலையத்தில் பணிபுரிந்த பெண் ஊழியருக்கு கொரோனா கண்டறியப்பட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 450 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விமான நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் உணவு விடுதிகள் அடைக்கப்பட்டதுடன் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.







