மொத்த விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாக கொண்ட பணவீக்கம் கடந்த ஜனவரி மாதம் 4.73 சதவீதமாக குறைந்துள்ளது. எரிபொருள் மற்றும் மின்சக்தி போன்றவற்றால் இந்த குறைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 4.95 சதவீதமாக இருந்தது. 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த பணவீக்கம் 13.68 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், உணவுப் பொருட்களின் பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 2.38 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1.25 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பருப்பு வகைகள் மற்றும் தானிய வகைகளின் பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 2.41 சதவீதமாக உள்ளது.
அண்மைச் செய்தி: ராதா வேம்பு; இந்தியாவின் மூன்றாவது பெண் கோடீஸ்வரர்
மினரல் ஆயில், கெமிக்கல் பொருட்கள், டெக்ஸ்டைல், பெட்ரோலியம் மற்றும் கேஸ் ஆகியவற்றின் விலை குறைந்ததே மொத்த விலை பணவீக்கம் குறைந்ததற்கு காரணம் என்று மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால் சில்லறை பணவீக்கம் இதற்கு அப்படியே எதிர்மாறாக உள்ளது. 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் சில்லறை பணவீக்கம் 6.52 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த சில்லறை பணவீக்கம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 5.72 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.







