கல்விக்கான சர்வதேச செயலியை தான் தொடங்கி இருப்பதாக பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை இட்டிருந்தார். அதில், “1992ல் தொடங்கிய எனது கிரிக்கெட் பயணம் தற்போது 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கிரிக்கெட் எனக்கு எவ்வளவோ கொடுத்துள்ளது. குறிப்பாக, மக்களின் ஆதரவு கிரிக்கெட் மூலமே எனக்கு கிடைத்தது” என கூறி இருந்தார்.
“எனது கிரிக்கெட் பயணத்தில் என்னோடு அங்கம் வகித்தவர்கள், ஆதரவு அளித்தவர்கள், உதவியவர்கள் என ஒவ்வொருவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மக்கள் பலருக்கும் ஏதாவது ஒருவகையில் உதவ வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன். நான் தொடங்க உள்ள இந்த புதிய அத்தியாயத்திற்கும் மக்களின் ஆதரவு தொடரும் என நம்புகிறேன்” என கங்குலி தெரிவித்திருந்தார்.
அந்த பதிவில், அவரது திட்டம் என்ன என்பது குறித்து தெரிவிக்காததால், பலரும் பலவிதமாக ஊகித்தனர்.
பிசிசிஐ தலைவராக இருந்து வரும் செளரவ் கங்குலி அந்த பதவியை ராஜினாமா செய்வார் என செய்திகள் வந்தன. எனினும், அதற்கு வாய்ப்பே இல்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா திட்டவட்டமாக மறுத்தார்.
சமீபத்தில் கொல்கத்தா சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, செளரவ் கங்குலியின் வீட்டிற்குச் சென்று அவருடன் கலந்துரையாடினார்.
இதை சுட்டிக்காட்டி, கங்குலி பாஜகவில் இணைவார் என்று பலரும் கூறினர்.
இந்நிலையில், இந்த குழப்பத்துக்கு விடை அளித்துள்ள செளரவ் கங்குலி, கல்விக்கான சர்வதேச செயலியை தொடங்கி இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இதன்மூலம் சில மணி நேரம் நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்தது.
கங்குலியின் ரசிகர்கள் பலரும் அவர் நல்ல முடிவைத்தான் எடுத்துள்ளார் என்றும், அவருக்கு தங்கள் ஆதரவு இருக்கும் என்றும் சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.








