சாதி வாரி கணக்கெடுப்புக்கு பாஜக உள்பட அனைத்து கட்சிகளும் ஒப்புக் கொண்டதாக பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து ஆலோசனை நடத்த பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. பாஜக, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்றன. இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், அனைத்து கட்சி தலைவர்களும் ஒருமனதாக சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அந்த மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் கூறியதாவது:
சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை முன்மொழிவோம். சட்டச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பை நாங்கள் முன்மொழியவில்லை.
சாதி வாரி கணக்கெடுப்பை அமல்படுத்த மாநில அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்படும். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பது தான் இந்தக் கணக்கெடுப்பின் நோக்கம் என்றார் நிதீஷ் குமார்.

கர்நாடகா, ஒடிஸா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இதேபோன்ற கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், சமூக-பொருளாதார கணக்கெடுப்பு என்ற பெயரில் இது நடத்தப்பட்டது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, தேசிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. எனினும், சில காரணங்களால் அதன் தரவு வெளியிடப்படவில்லை. பாஜக தலைமையிலான தற்போதைய மத்திய அரசு, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மறுத்துவிட்டது. எனினும், அதை மாநிலங்களின் விருப்பத்துக்கே விட்டுவிட்டது.
பிகாரில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகியவை கூட்டணியில் உள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி கடந்த ஆண்டே பிரதமர் மோடியை நிதீஷ் குமார் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







