ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதுதொடர்பாக ஐநா பாதுகாப்பு அவை அவசர ஆலோசனை நடத்தியது. இதில் பேசிய ஐநாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் குலாம் ஐசக்சாய், தலிபான்கள் ஆட்சியால், லட்சக்கணக்கான மக்கள் சுதந்திரத்தை இழக்க நேரிடும் என வேதனை தெரிவித்தார்.
பள்ளிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு பெண்கள் செல்ல முடியாத மோசமான சூழல் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரேஸ், அனைத்து மக்களின் மனிதாபிமான சட்டம், உரிமை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என தலிபான் உள்ளிட்ட அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
ஆப்கானிஸ்தான் மக்களை கைவிட முடியாது என கூறிய குட்டரஸ், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.








