அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் யாருடைய வேலையையும்
பறிக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது அல்ல என கனிமொழி எம்.பி. விளக்கம்
அளித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி சார்பில், மாணவிகளுக்கு கல்வி
உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக மகளிரணி செயலாளர்
கனிமொழி எம். பி கலந்து கொண்டு 20 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்
என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி இருப்பதாக பெருமிதம்
தெரிவித்தார். யாருடைய வேலையையும் பறிக்கும் நோக்கில் இந்த திட்டம் கொண்டு
வரப்படவில்லை என்றும், கனிமொழி எம்.பி விளக்கம் அளித்தார்.
குறிப்பாக, யாருக்கும் யாரும் குறைந்தவர்கள் இல்லை என்பதனை நிரூபிக்கும் வகையில்
தமிழக முதலமைச்சர், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும்
எல்லாருக்கும் வாய்ப்பளிக்கக் கூடிய வகையில் காலிப் பணியிடங்களை மட்டுமே தமிழக
முதலமைச்சர் நிரப்பியுள்ளார் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும்
அவர் கேட்டுக்கொண்டார்.
பெண்கள் படிக்க வேண்டும் என்று பல திட்டங்கள் கொண்டுவந்தவர் கருணாநிதி என்றும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் என்று அறிவித்தவர் திமுக தலைவர்
ஸ்டாலின் என்றும் அவர் தெரிவித்தார்.







