முக்கியச் செய்திகள் உலகம் கட்டுரைகள் விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து தொடர்; ரசிகர்களை ஆட்கொள்ளப்போகும் பாடல் எது?


ஜெனி

கட்டுரையாளர்

ஒவ்வொரு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் போதும், அந்த தொடருக்கென அதிகாரப்பூர்வ பாடல் அறிவிக்கப்படுவது வழக்கம். அப்படி இதற்கு முன்பு வெளியான பாடல்கள் உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்தது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான பாடல்களில் ரசிகர்களை அதிகம் ஆட்கொள்ளப்போவது எது?  

உலகில் அதிகமான ரசிகர்களை கொண்ட விளையாட்டு என்ற பெருமையை தன்வசமாக்கியுள்ள கால்பந்து, கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே விளையாடப்பட்டு வந்ததாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. அப்படி நீண்ட காலமாக மக்களோடு மக்களாக பயணித்து வரும் கால்பந்து விளையாட்டு, இன்று பட்டி தொட்டி எங்கும் பரந்து விரிந்துள்ளது. இந்த கால்பந்து விளையாட்டில், உலகத்தின் பல்வேறு நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை தொடர், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

1930ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த உலகக் கோப்பை தொடர் இதுவரை 21 முறை நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு கத்தார் நாட்டில் 22வது ஃபிஃபா உலகக் கோப்பை நடைபெற உள்ளது. பொதுவாகவே கால்பந்து மீதான ஈர்ப்பு பெரும்பான்மையான மக்களிடம் காணப்படும் நிலையில், இந்த உலகக் கோப்பை தொடர்கள் ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறது என்றால் அது மிகையல்ல.

உலகக் கோப்பை தொடர் மீதான மக்களின் வரவேற்பு அதிகரிப்பதற்கு விளையாட்டு மட்டுமே காரணம் என்று நிச்சயம் கூற முடியாது. தனுஷ் நடித்த ’படிக்காதவன்’ திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு நகைச்சுவை காட்சியில், கதாநாயகன் தனுஷ் கூறும் வசனத்தை இங்கு நினைவுகூற விரும்புகிறேன். ’MP3-ல வர்ற 2000 சினிமா பாட்டு மனப்பாடமா தெரியுது மச்சான்… இரண்டடி திருக்குறள மனப்பாடம் பண்ண முடியல…’ என்ற வசனத்தை அனைவரும் கேட்டிருப்போம். பலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து இது. காரணம் இசை. தாலாட்டு தொடங்கி ஒப்பாரி முடிய, மனிதனின் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை இசை அவனோடு பயணிக்கிறது.

கால்பந்து விளையாட்டை பற்றி பேசிக் கொண்டிருக்கும்பொழுது, திடீரென இசையை பற்றி ஏன் பேசப்படுகிறது என்ற குழப்பம் ஏற்படலாம். மேலே கூறியது போல கால்பந்து உலகக் கோப்பைக்கு, மக்களின் எதிர்பார்ப்பும் வரவேற்பும் அதிகரிப்பதற்கான காரணம், விளையாட்டு மட்டுமல்ல. அந்த தொடர்களில் இடம்பெறும் கீதங்களும், பாடல்களும் தான். எப்படி எல்லா நாடுகளும் தங்களுக்கென தேசிய கீதங்களை உருவாக்கி வைத்துள்ளதோ, அதே போல், ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் நடைபெறும் ஆண்டுகளில், அந்த தொடருக்கென தனி கீதங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த கீதங்களும் பாடல்களும், உலகக் கோப்பை கால்பந்து தொடரை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த பேருதவி புரிகின்றன என்றே கூற வேண்டும்.

1962ஆம் ஆண்டு முதல், உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காக கீதங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் ஃபிஃபாவால் அதிகாரப்பூர்வமாக கீதங்களும் பாடல்களும் அங்கீகரிக்கப்பட்டது 1990களுக்குப் பிறகுதான். 2010ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடலாக பிரபல கொலம்பிய பாடகி ஷகிராவின் ‘வக்கா வக்கா’(waka waka) என்ற பாடல் இடம்பெற்றது. இந்த பாடல் சமூக ஊடகங்கள் பெரிதளவில் பயன்படுத்தப்படாத அன்றைய காலத்திலேயே, உலகம் முழுவதும் ஒலித்தது. பாடலின் வீடியோ, தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. இதில் பெண்களின் நடனங்கள் அனைவரையும் ஈர்த்தது. வரிகள் புரியாத போதிலும், மக்களை ரீங்காரம் செய்ய வைத்த பாடலாக ’வக்கா வக்கா’ அமைந்தது குறிப்பிடத்தக்கது. இன்றும் இந்த பாடலுக்கான மவுசு குறையவே இல்லை.

2014ஆம் ஆண்டு பிரேசிலில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது. முந்தைய உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ பாடல் உலகம் முழுவதையும் ஆட்கொண்ட நிலையில், இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பாடலும் உலகத்தை கூடுதலாக தன்வசம் ஈர்த்துக் கொண்டது. பிரபல பாடகர்கள் ஜெனிஃபர் லோபஸ், பிட்புல், கிளாடியா லெய்ட் ஆகியோர் இணைந்து பாடிய ’வி ஆர் ஒன்’(We are One) என்ற பாடல் தான் அது. தற்போது யூடியூபில் 858 மில்லியன்களுக்கு மேல் பார்வைகளைப் பெற்றிருக்கும் இந்த பாடல், அன்றே கால்பந்து ரசிகர்களை குஷிப்படுத்தியது.

ரஷ்யாவில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிகாரப்பூர்வ பாடலாக பிரபல நடிகர் வில் ஸ்மித், பாடகர் நிக்கி ஜாம், எரா இஸ்ட்ரெஃபி ஆகியோரின் கூட்டணியில் வெளியான ‘லிவ் இட் அப்’(Live it up) என்ற பாடல் அறிவிக்கப்பட்டது. மேலே குறிப்பிடப்பட்ட பாடல்களோடு ஒப்பிடுகையில், இதற்கு நினைத்த அளவு மிகப்பெரிய வரவேற்பு கிட்டவில்லை.

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பாடல்களுக்கு ஒருபுறம் மக்கள் வைப்(Vibe) பண்ணிக் கொண்டிருக்கையில், உலகக் கோப்பையின் புரொமோஷனுக்காக வெளியிடப்பட்ட பாடல்களும் ஒருபுறம் மக்களை தன்பால் இறுகக் கட்டிப்போட்டு வந்தது. 2006ஆம் ஆண்டு வெளியான ஷகிராவின் ’ஹிப்ஸ் டோண்ட் லை’(Hips Don’t Lie), 2010ஆம் ஆண்டு வெளியான கனானின் ’வேவிங் ஃபிளாக்’(Waavin’ Flag), 2014ஆம் ஆண்டு வெளியான ஷகிரா மற்றும் கார்லின்ஹோஸ் பிரவுனின் ’லா லா லா’(La La La), மேஜிக் சிஸ்டமின் ‘மேஜிக் இன் தி ஏர்’(Magic in the Air), 2018ஆம் ஆண்டு வெளியான ஜேசன் டெருலோவின் ‘கலர்ஸ்’(Colours) முதலிய பாடல்கள் ஃபிஃபாவால் உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ பாடல் அல்லது கீதமாக அறிவிக்கப்படாமல் உலகம் முழுவதும் பிரபலமானவை. உலகக் கோப்பை கால்பந்து தொடரைப் பற்றி உலகெங்கும் பறைசாற்றுவதில் இந்த பாடல்கள் அனைத்தும் எந்த விதத்திலும் குறைவைக்கவில்லை.

இவ்வாறு ஒவ்வொரு உலகக் கோப்பை கால்பந்து தொடரின்போதும், விளையாட்டுக்கு எழும் எதிர்பார்ப்பைப் போன்றே, அந்த தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடலுக்கும், கீதத்துக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. இந்த ஆண்டு கத்தார் நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில், அதிகாரப்பூர்வ பாடலாக குரிப்பிட்டு எந்த பாடலும் அறிவிக்கப்படவில்லை. மாறாக அதிகாரப்பூர்வ பாடல் தொகுப்பிலிருந்து ஒவ்வொரு பாடலாக வெளியிட்டு வருகிறது ஃபிஃபா. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு டிரினிடாட் கார்டோனா, டேவிடோ மற்றும் ஆயிஷா ஆகியோரின் கூட்டணியில் உருவான ’ஹய்யா ஹய்யா’(Hayya Hayya) என்ற பாடல் வெளியிடப்பட்டது. 2 மாதங்களுக்கு முன்பு ஒசுனா மற்றும் ஜிம்ஸ் ஆகியோரின் ’அர்ஹபோ’(Arhbo) என்ற பாடல் வெளியிடப்பட்டது. 1 மாதத்திற்கு முன்பு, நோரா ஃபட்டேஹி, பால்கீஸ், ரஹ்மா ரியாட், மனால் மற்றும் ரெட்ஒன் ஆகியோரின் கூட்டணியில் உருவான ‘லைட் இன் தி ஸ்கை’(Light in the Sky) என்ற பாடல் ஃபிஃபாவால் வெளியிடப்பட்டது. நேற்று பிரபல பாடகி நிக்கி மினாஜ், மலுமா, மற்றும் மிரியம் ஃபேர்ஸ் ஆகியோரின் கூட்டணியில் ’துக்கு தக்கா’(Tukoh Taka) என்ற பாடல் வெளியிடப்பட்டது.

இதுவரை வெளியான இந்த நான்கு பாடல்களுமே யூடியூபில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில் பிரபல தென் கொரிய ஆண்கள் இசைக்குழுவான BTS-ன் இளைய உறுப்பினர் ஜுங்கூக்கின் குரலில் உருவாகியுள்ள ’ட்ரீமர்ஸ்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் பாடல், நாளை இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு வெளியிடப்படும் என ஃபிஃபா அறிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் BTS குழுவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால் இந்த ஆண்டு நடைபெறும் ஃபிஃபா கூடுதலாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் ஜுங்கூக் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க விழாவிலும் பங்கேற்று, தனது பாடலை அரங்கேற்றுவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்னரே வெளியானதால், தொடக்க விழாவுக்கான ரசிகர்களின் காத்திருப்பு, எந்த அளவுகோலாலும் அளக்கமுடியாத அளவு உச்சத்தை தொட்டுள்ளது.

பிரபல பாடகி டூவா லிபாவும் தொடக்க விழாவின் அரங்கேற்றத்தில் பங்குபெறுவார் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து பல பாடகர்கள், பாடகிகளின் பெயர்கள், ரசிகர்களால் இந்த தொடக்க விழா அரங்கேற்றத்தில் பங்கேற்கும் பட்டியலில் இடம்பெற்று வருகிறது. ஆனால் முழுமையான விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால், ரசிகர்கள் ஆச்சரியத்திற்காக காத்திருக்கின்றனர்.

இவ்வாறு பல பாடல்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அதிகாரப்பூர்வ பாடல்களாக இடம்பெற்றுள்ள நிலையில், ரசிகர்களின் மனதை அதிகம் கவரும் பாடலாக எந்த பாடல் அமையும் என்பதை கணிப்பது சற்று கடினமாகத்தான் உள்ளது….

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கஞ்சா கடத்தல் வழக்கில் வெளிநாட்டு இளைஞர் கைது!

Gayathri Venkatesan

“மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் செழிக்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Jeba Arul Robinson

நாடளுமன்றத்தை முடக்கியது ஆளுங்கட்சியின் பிடிவாதமே – திருமாவளவன்

Jeba Arul Robinson