மியான்மரில் ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி முதல் வாரம் மியான்மர் நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. இதையடுத்து மியான்மரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாட்சி, அந்நாட்டு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, ஆங் சான் சூகி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர்.

இதனால், அந்நாடு மக்கள் ராணுவ ஆட்சியை கண்டித்து மியான்மரின் மிகப் பெரிய நகரமான யாங்கோனில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் போராட்டத்தை தடுக்க மியான்மரின் ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. போரட்டகாரர்களை கட்டுப்படுத்த அதிகளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர், கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
இதனைத்தொடர்ந்து தீடீரென போராட்டக்காரர்களை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்திருக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஐநா மனித உரிமை ஆணையம் இத்தகவலை உறுதி செய்தது.
இந்த மனித உரிமை மீறல் செயலை, பல உலக தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். ஐ.நாவின் செய்தி தொடர்பாளர் உட்பட பலர் இதற்கு அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், “ராணுவ அதிகாரிகள் பொதுமக்களுக்கு எதிராக அடக்குமுறையை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும், மக்கள் தங்கள் கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான தலைவர் போரெல் தன் டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
“நாங்கள் எப்போதும் மியான்மர் மக்களின் பக்கம்தான், அனைத்து நாடுகளும் தங்கள் ஆதரவை மியான்மர் மக்களுக்கு கொடுக்கவேண்டும்” என அமெரிக்க நாடளுமன்ற செயலாளர் பிளிங்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.







