சென்னை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட ஜமாலியா பள்ளியின் அருகே கால்பந்து மைதானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின் போது விளையாட்டு வீரர்கள் அதிகம் உள்ள திரு.வி.க நகரில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும் என்று திருவிக நகர் எம்.எல்.ஏ. தாயகம் கவி, கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன், விளையாட்டுத்துறை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அறிவிப்பாக உலக சதுரங்கப் போட்டி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், 200 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கும் உலக சதுரங்கப் போட்டி தமிழ்நாட்டில் நடைபெறுவது இந்தியாவுக்கே பெருமை என்றும் கூறினார்.
மேலும், சர்வதேச தரத்திலான 5 மைதானங்கள் சென்னையில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், திரு.வி.க.நகர் ஜமாலியா பள்ளி அருகே 7 பேர் விளையாடும் அளவுக்குக் கால்பந்து போட்டிகள் நடத்துவதற்கான விளையாட்டு மைதானம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: