“டெண்டருக்கு முன்பே அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட பணிகள்!” – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் நடைமுறைகள் நிறைவடைவதற்கு முன்பாகவே அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அசோகத் தூண் அமைத்தல் மற்றும் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்து, கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அமைச்சர்சரத்குமாரால் திறந்து வைக்கப்பட்ட நிலையில், பணிகளுக்கான டெண்டர் வழங்கும் செயல்முறையே இதுவரை நிறைவடையாத சூழலில், அந்தப் பணிகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டன என்று அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

சுமார் ரூ.46 லட்சம் மதிப்பிலான இரண்டு பணிகளுக்கான டெண்டர் நடைமுறைகள் நிறைவடைவதற்கு முன்பாகவே அவை எவ்வாறு செயல்படுத்தப்பட்டன? முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு சட்டவிரோதமாக ஒப்பந்தம் வழங்கப்பட்டதா? என்ற கேள்வி எழுவதோடு, டெண்டர் நடைமுறைகள் நிறைவடைவதற்கு முன்பாகவே பணிகள் நிறைவடைந்து திறந்து வைக்கப்பட்டிருப்பது, வெளிப்படையான டெண்டர் நடைமுறைகளுக்கும் சட்ட விதிகளுக்கும் எதிரானது மட்டுமல்லாமல், மிகப்பெரிய ஊழல் மற்றும் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

தனது கட்டுப்பாட்டில் இருக்கும் நகராட்சி நிர்வாகத்துறையில் நிறைவடைந்த பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பதும், போலி டெண்டர் அறிவிப்பை வெளியிட்டு அதன் மூலம் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவதும் தான் முதலமைச்சர் விஜய் கூறும் நேர்மையான, வெளிப்படைத்தன்மையான, ஊழலற்ற ஆட்சி நிர்வாகமா ? என்ற கேள்வியை பொதுமக்கள் ஒவ்வொருவரும் எழுப்பத் தொடங்கிவிட்டனர்.

எனவே, டெண்டர் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பாகவே நிறைவடைந்து திறந்து வைக்கப்பட்ட இந்தப் பணிகள் தொடர்பாக அறப்போர் இயக்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, அந்த விசாரணை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெறுவதை முதலமைச்சர் விஜய் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.