கொடைக்கானல் பகுதியில், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை உபயோகித்து ஒலி மாசுபாடு ஏற்படுத்தினால் கட்டிடத்தின் மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானலை சேர்ந்த மினா எர்க் ஆவரி என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “மலைகளின் இளவரிசி என அழைக்கப்படும் கொடைக்கானல் சுற்றுலா தலமாக உள்ளது. வனப்பகுதியில் பல்வேறு அரிய உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
கொடைக்கானலில் 31 தேவாலயங்கள், 18 கோவில்கள், 10 மசூதிகள் உள்ளன. மேலும் நகரின் பல இடங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள், ஸ்பீக்கர்கள் அதிக ஒலி அளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், வனப்பகுதியில் காற்று மாசு ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கும் பாதிப்பாக உள்ளது.
ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள், ஸ்பீக்கர்கள் ஆகியவற்றின் பயன்பாடு குறித்து தெளிவாக வரையறுத்துள்ளனர், ஒலி மாசு கட்டுபாட்டு சட்டம் 2000 ன் படி, கொடைக்கானலில் குறிப்பிட்ட டெசிபிலுக்கு மேல் ஒலி எழுப்பும் வகையில், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள், ஸ்பீக்கர்கள் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு பொறியாளர் ஆகியோரைக் கொண்ட குழு அமைத்து கொடைக் கானல் பகுதிகளை ஆய்வு செய்து, ஒலி மாசுபாட்டில் விதிமுறை மீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
கொடைக்கானல் பகுதியில் தொடர்ந்து, கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை உபயோகித்து ஒலி மாசுபாடு ஏற்படுத்தினால் கட்டிடத்தின் மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.







