மது கடத்தியவரை சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த கர்ப்பிணி இன்ஸ்பெக்டர்!

காரைக்காலில் இருந்து நாகைக்கு மதுபானங்கள் கடத்தி வந்த நபரை மதுவிலக்கு கர்ப்பிணி பெண் ஆய்வாளர் சினிமா பாணியில் விரட்டி பிடித்தார்.  ஊரடங்கு உத்தரவு காரணமாக நாகை, திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி சிலர் காரைக்காலிலிருந்து மதுபானங்கள் கடத்தி வந்து நாகை…

காரைக்காலில் இருந்து நாகைக்கு மதுபானங்கள் கடத்தி வந்த நபரை மதுவிலக்கு கர்ப்பிணி பெண் ஆய்வாளர் சினிமா பாணியில் விரட்டி பிடித்தார். 

ஊரடங்கு உத்தரவு காரணமாக நாகை, திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி சிலர் காரைக்காலிலிருந்து மதுபானங்கள் கடத்தி வந்து நாகை மாவட்டத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காரைக்காலிருந்து மதுபானம் கடத்தலை தடுக்கும் விதமாக தமிழக எல்லையான நாகை மாவட்டம் வாஞ்சூர் சோதனை சாவடியில் இன்று மதுவிலக்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியே இரண்டு பெரிய பைகளுடன் வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தினர். வாகனத்தில் மதுபானங்கள் கடத்தி வந்த நபர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதுகுறித்து  நாகை மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கர்ப்பிணியாக இருக்கும் பெண் ஆய்வாளர் டோனிஸ்மேரி, உதவி ஆய்வாளர் ரமேஷ் உட்பட மதுவிலக்கு போலீசார் அவரை இருசக்கர வாகனத்தில் 7 கிலோமீட்டர் துரத்திற்கு விரட்டி சென்றனர். இறுதியில் அந்நபரை நாகை கடைவீதி அருகே மடக்கிப் பிடித்தனர்.

அப்போது மதுபோதையில் இருந்த அந்த நபர் சாவி கொத்தில் இருந்த கத்தியை காட்டி போலீசாரை குத்தி விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதனை பார்த்த பொதுமக்கள் தப்பிச் செல்ல முயன்ற நபரை போலீசாருடன் சேர்ந்து பிடித்தனர். இதனையடுத்து அவனிடமிருந்த டிராவல் பேக்கை சோதனை செய்ததில் அதில் 78 குவாட்டர் பாட்டில்கள், 12 புல்பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் காரைக்காலில் இருந்து நாகைக்கு மதுபானங்கள் கடத்திய நபர் வேதாரண்யம் நாலுவேதபதியைச் சேர்ந்த முருகையன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து முருகையனை கைது செய்த மதுவிலக்கு போலீசார், அவரிடமிருந்து மதுபானங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். சினிமா போல் அரங்கேறிய சம்பவத்தால் நாகையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.