மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் அயர்லாந்து அணியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்தில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 8-வது மகளிர் டி20 ஓவர் உலகக் கோப்பை
தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, அயர்லாந்தை எதிர்கொண்டது.
டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணியினர்
20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணியின் சார்பில் அதிரடியாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 56 பந்தில் 87 ரன்கள் விளாசினார்.
இதனையும் படியுங்கள்: நெரிசலில் நெளியும் சென்னை – நியூஸ்7 தமிழின் மெகா கள ஆய்வு!
இதனைத் தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. முதல் பந்திலேயே துவக்க வீராங்கனை அமி ஹன்டர் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதே ஓவரின் 5வது பந்தில் ஓர்லா ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேபி லெவிஸ், கேப்டன் லாரா டெலானி நிதானமாக ஆடினர்.
அயர்லாந்து அணி 8.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த காற்றுடன் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது. இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 6 புள்ளியுடன் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
இதனையும் படியுங்கள் : சர்வதேச டி20 போட்டியில் சாதனை படைத்த ஹர்மன்ப்ரீத் கௌர்!
போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா அறிவிக்கப்பட்டார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி, உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது. பி பிரிவில் இங்கிலாந்து, இந்தியா தலா 6 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
– யாழன்







