தினம் தினம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் சென்னைவாசிகளின் கருத்துக்களை, கோரிக்கைகளை அதிகாரிகள் தரப்பிற்கு எடுத்துச் சொல்லும் வகையில் இன்று மெகா கள ஆய்வை நியூஸ் 7 தமிழ் நடத்துகிறது.
பொறுப்பும் பொதுநலனும் என்ற தாரக மந்திரத்தை கொண்ட நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி, மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை அரசிடமும், உரிய அதிகாரிகளிடமும் சேர்க்கும் வகையில் கள ஆய்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று ஒருநாள் முழுவதும் சென்னையில் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி மெகா கள ஆய்வ நடத்துகிறது.
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் பகுதிகளில் சாலைகள் தடுக்கப்பட்டு குறுகலாக ஆக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகங்களுக்குச் செல்வோர் மட்டுமின்றி காலை நேரத்தில் அவசர கால சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைகளுக்கு செல்வோர் கூட பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : உலக தாய்மொழிகள் தினம் – ஏன்…? எப்படி…?
மாநகரில் வளர்ச்சிப் பணிகள் அத்தியாவசியம் என்றாலும் வாகன நெரிசல், போக்குவரத்து முடக்கம் உள்ளிட்ட அவஸ்தையை எத்தனை நாளைக்கு தாங்குவது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து “நெரிசலில் நெளியும் சென்னை” என்ற தலைப்பில் மெகா கள ஆய்வை நியூஸ்7 தமிழ் நடத்துகிறது. இன்று காலை 9 மணி முதல் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில், தொடர் நேரலையில் கள ஆய்வு ஒளிபரப்பாகிறது.








