ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வடமாநிலப் பெண் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் வடமாநில பெண் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வேலாயுதபுரத்தில் அஜய் குமார் மண்டல் மற்றும் அவரது மனைவி…

சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் வடமாநில பெண் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வேலாயுதபுரத்தில் அஜய் குமார் மண்டல் மற்றும் அவரது மனைவி வந்தனா மாஜி வசித்து வந்தனர். இவர்கள் ஒடிசா மாநிலம் பட்ராக் பகுதியைச் சேர்ந்தவர்கள். வேலாயுதபுரத்தில் தங்கி இருந்த இவர்கள், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர்.

இவர்களுக்கு திருமணம் நடைபெற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நீண்ட நாட்களாக அஜய் குமாரும் வந்தனாவும் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. தவறை உணர்ந்த அஜய் குமார் மண்டல், அந்த பழக்கத்தில் இருந்து வெளி வந்துவிட்டார். ஆனால் வந்தனா தொடர்ந்து ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வந்தனா, ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 70 ஆயிரம் ரூபாயை இழந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அஜய் குமார், வந்தனாவை கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த வந்தனா, தனது வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் விரைந்து சென்று, வந்தனாவின் உடலை கைப்பற்றி, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு
செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவம் நிலையில், வடமாநிலப் பெண் ஒருவர் உயிரிழந்திருப்பது கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.