பெண் ஒருவர் சைக்கிள் ஓட்டும் போது தலையில் குடிநீர் பாட்டிலை வைத்து, அதனை பேலன்ஸ் செய்தபடியே சைக்கிள் ஒட்டிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
குழந்தை பருவத்தில் பலரும் மணிக்கணக்கில் சைக்கிள் ஓட்டியிருப்பார்கள். அதே ஆர்வத்துடன் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளும் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாமோ பெரியவர்கள் ஆனா பிறகு சைக்கிள் ஓட்டும் பழக்கத்தையே மறந்து பைக்குகளில் பறந்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் சைக்கிள் ஓட்டுதல் பல நன்மைகளை வழங்கும் சிறந்த ஏரோபிக் பயிற்சிகளில் ஒன்றாகும்.
இது மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதற்கு வழி வகை செய்வதோடு, இதயத்திற்கு சிறந்த பயிற்சியாகவும் அமைந்து மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற இதய நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது. அதனால் தான் இன்றளவும் வெளிநாடுகளில் பலர் சைக்கிள் ஓட்டும் பழக்கத்தை தொடர்ந்து வைத்துள்ளனர்.
இத்தகைய சைக்கிள் ஓட்டுவதில் மலையேறுதல், சமவெளியில் பயணம் செய்தல், நீண்ட தூரம் எந்த நிறுத்தமும் இல்லாமல் குறிப்பிட்ட நேர அளவு பயணம் செய்தல் என பல வகைகள் இருக்கின்றன. ஆனால் ஒரு பெண் இத்தகைய பயணங்களில் இருந்து வித்யாசமாக தலையில் மினரல் வாட்டர் பாட்டிலை வைத்து, அதனை பேலன்ஸ் செய்தபடியே சைக்கிள் ஒட்டிய வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
பிலிப்பைன்ஸை சேர்ந்த மரியேல் அமாபாவை என்ற அந்த பெண் கடந்த 2021 கொரோனா காலகட்டத்தில் மேற்கொண்ட சைக்கிள் பயணத்தின் போதே அந்த வித்யாசமான வீடியோவை எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தாலும், சமீபத்தில் Reddit இணையதளத்தில் அந்த வீடியோ மீண்டும் ரீபோஸ்ட் செய்யப்பட்டிருந்தது. இந்த வீடியோ தற்போது லட்சக்கணக்கான பார்வைகளை குவித்து வருவதோடு, பல பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களையும் பெற்று வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா








