ராஜபாளையத்தில் முன்னறிவிப்பு இன்றி குடிநீர் சோதனை ஓட்டம் நடைபெறுவதால்,
ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக கழிவுநீர் ஓடையில் செல்கிறது. மேலும்
குழாய் உடைப்பு காரணமாக சாலைகளும் சேதமாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும்
தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான குழாய் பதிக்கப்பட்டுள்ளது. 7, 18
மற்றும் 19 வது வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் தண்ணீர் சோதனை
ஓட்டம் நடைபெற்றது.
குழாய்களில் இருந்து வரும் தண்ணீர் சுத்தமான குடிநீரா என்பது தெரியாமல் அதை
சேகரிக்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. எனவே சோதனைக்காக வினியோகம் செய்யப்பட்ட ஆயிரக் கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் ஓடி கழிவு நீர் கால்வாயில் கலக்கின்றது.
இதனால் அப்பகுதி முழுவதும் சாலையில் தண்ணீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து
ஓடியது. சில இடங்களில் தண்ணீரின் அழுத்தத்தை தாங்க முடியாமல் ஆங்காங்கே
குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பில் இருந்து வெளியேறிய தண்ணீரின்
காரணமாக சாலைகள் சேதமானது.
திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் இது வரை சரி செய்யப்படாத நிலையில், குழாய்களில் ஏற்படும் உடைப்பு காரணமாக சாலைகள் மேலும் சேதமாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
முறையான அறிப்புடன் சோதனை நடைபெற்றால், கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்திக்
கொள்ள ஏதுவாக இருக்கும் என கூறும் பொது மக்கள் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரெ. வீரம்மாதேவி
முன்னறிவிப்பின்றி சோதனை ஓட்டம்: குடிநீர் வீணாவதால் பொதுமக்கள் வேதனை!
ராஜபாளையத்தில் முன்னறிவிப்பு இன்றி குடிநீர் சோதனை ஓட்டம் நடைபெறுவதால், ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக கழிவுநீர் ஓடையில் செல்கிறது. மேலும் குழாய் உடைப்பு காரணமாக சாலைகளும் சேதமாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. விருதுநகர் மாவட்டம்…






