எங்கள் கட்சியின் அடுத்த தலைவர் பெண் ஒருவர்தான் என மூத்த அரசியல் தலைவர் ஒருவர் கொளுத்திப்போட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த தகவலை சொன்னவர் அடுத்தவருடைய பதவியை பற்றி அல்ல. தன்னுடைய பதவியை தாம் தியாகம் செய்யவுள்ளதாக மறைமுகமாக கூறியுள்ளார். அவர் வேறு யாருமல்ல. சாட்சாத் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கேஎஸ் அழகிரிதான், இவர் இப்படி கூற காரணம் என்ன என்பது குறித்து விசாரணையில் இறங்கினோம்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, அழகிரிக்கு மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது, தனக்கு இந்த முறை வாய்ப்பு வராதா ? என பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வது வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு ஆறு பேர் அடுத்த மாதம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதில் நான்கு பேர் திமுக கூட்டணியில் இருந்தும், இருவர் அதிமுக கூட்டணியில் இருந்தும் தேர்வாக வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியில் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மற்றொரு பதவி கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்த பதவியை பெற முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் பகீரத முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. ஒரு காலத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்த சிதம்பரம், பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, திமுகவிற்கு ஆதரவாக, குறிப்பாக முதல்வரின் செயலை பல்வேறு நேரங்களில் பாராட்டி வருகிறார். திமுகவின் ஓராண்டு நிறைவு விழாவிலும் முதலமைச்சர் ஸ்டாலினின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அனைவரும் மெச்சும் வகையில் உள்ளது என பாராட்டினார்.
இந்த சூழ்நிலையில், இந்த முறை மாநிலங்களவை உறுப்பினர் பதவி தனக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்த கேஸ் அழகிரி, தமது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், அதே நேரத்தில் உழைப்பதற்கு நாங்கள் தேவைப்படுகிறோம், பதவி சுகத்தை அனுபவிப்பதற்கு மட்டும் சிதம்பரமா என்ற எண்ணத்தில் இருப்பதாக தெரிகிறது. அதனால் அடுத்து நடக்கவுள்ள உட்கட்சித் தேர்தலில் தனக்கு மாநிலத் தலைவர் பதவியும் வேண்டாம் என்ற எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை தலைமைக்கு நாசூக்காக வெளிப்படுத்தவே எங்கள் கட்சியின் அடுத்த தலைமை ஒரு பெண்ணாக இருக்கலாம் என கொளுத்திப் போட்டுள்ளதாக பேசப்படுகிறது.
அதோடு மட்டுமில்லாமல் அப்படி ஒரு எண்ணத்தில் காங்கிரஸ் கட்சி இல்லவே இல்லை. இதுவரை அடுத்த மாநிலத் தலைமை யார் என்ற சிந்தனைக்கு செல்லவே இல்லை என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் கேஎஸ் அழகிரி இந்த பேட்டியால் அடுத்த தலைமை எம்.பி., ஜோதி மணியா அல்லது எம்.எல்.ஏ விஜயதாரணியா என அரசியல் வட்டாரங்கள் பேசப்பட்டு வருகிறது. இப்படி ஒரு சிந்தனைக்கு காங்கிரஸ் தேசிய தலைமை எழவே இல்லை என்றாலும், கேஎஸ் அழகிரி போன்ற கட்சி தலைவர்களை இழக்க தயாரில்லை. எனவே அவருக்கு உரிய அங்கீகாரம் விரைவில் கிடைக்கும் எனத் தெரிகிறது. இப்போதைக்கு எங்களது ஓரே கவலை, அடுத்த நாடாளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது, அனைத்து எதிர்கட்சிகளையும் ஒரு குடையில் கீழ் கொண்டு வருவது என்பதே ஆகும் என டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராமானுஜம்.கி
Advertisement: