சர்ச்சைக்கு தயாராகிறதா கமலின் ‘பத்தல பத்தல!’?

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்திற்கான single பாடல் வெளியாகியுள்ளது. பத்தல பத்தல எனத்தொடங்கும் இப்பாடல்தான் இணையத்தின் இன்றைய வைரல் கண்டெண்ட். இரவு 7 மணிக்கு பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட…

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்திற்கான single பாடல் வெளியாகியுள்ளது. பத்தல பத்தல எனத்தொடங்கும் இப்பாடல்தான் இணையத்தின் இன்றைய வைரல் கண்டெண்ட். இரவு 7 மணிக்கு பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 7.30 வரை பாடல் வெளியாவதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. சரியென்று இணையத்தை ஒரு அலசு அலசினால் youtube-க்கு முன்பே spotify App-ல் பாடலை ஆடியோ வடிவில் வெளியிடப்பட்டிருந்தது. இதன் பிறகு அனிருத்தின் youtube பக்கத்தில் கமலின் நடனங்கள் எதுவும் இடைபெறாமல் பாடல் வெளியாகியிருந்தது. மேலும் அதில் இருக்கும் comment sectionகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

எதிற்காக இத்தனை அலப்பறை என்று யோசித்தவாரே பாட்டை கேட்க தொடங்கினோம். அட்டகாசமான பீட்டோடு சென்னை ஸ்லாங்கில் ஜாலியாக தொடங்கிய பாடல் அப்படியே வண்டியை அரசியல் பக்கம் திருப்பியது. கமல்ஹாசன் தான் இப்பாடலை எழுதி பாடியுள்ளார் எனும் போது அரசியல் நெடி இல்லாமல் இருக்குமா?. இருப்பினும் ‘டோஸ் கொஞ்சம் அதிகமா இருக்கே’ எனவும் இணையவாசிகள் கூறிவருகின்றனர். அதிலும் குறிப்பாக..

கஜானாலே காசில்லே..
கல்லாலையும் காசில்லே!
காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே..
ஒன்றியத்தின் தப்பாலே..
ஒன்னியும் இல்ல இப்பலே!
சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே!

என்ற பாடல் வரிகள் சர்ச்சைக்கு வித்திடும் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. மத்திய அரசை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டுவரும் நிலையில், பாடலில் இடம்பெற்றிருக்கும் ‘ஒன்றியம்’ எனும் வார்த்தையை அதனுடன் தொடர்பு படுத்தி இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். மேலும், இந்த காரணங்களால் தான் பாடலை வெளியிடவும் தாமதம் ஏற்பட்டதோ எனவும் நெட்டிசன்கள் கேட்டுவருகின்றனர்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க சடாரென களத்தில் குதித்த ரஜினி ரசிகர்கள், ‘கமல் எங்க சூப்பர் ஸ்டார் டான்ஸை காப்பி அடிச்சிட்டாரு’ என்று கூறி எண்ட்ரி கொடுத்தனர். என்னவாக இருக்கும் என்று நாமும் இரண்டு பாடலை இரண்டு கணினியில் play செய்து அலசியெடுத்தோம். ரஜினி ரசிகர்களின் குற்றச்சாட்டுகளுக்கு மூகாந்திரம் இருப்பது போல் ஒரு portion சிக்கியது.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைத்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்டை படத்தில் இடம்பெற்ற மரணம் மாஸ் பாடலை கீழே இணைத்துள்ளோம். அதில் 2:23-லிருந்து 2:28-வரை பார்க்கவும்.

அப்படியே கமலின் விம்ரம் படத்தின் ‘பத்தல பத்தல’ பாடலையும் கீழே இணைத்துள்ளோம். இதில் 3:02-லிருந்து 3:08-வரை பாருங்களேன்.

குப்பைத்தொட்டியில் வடிவேலுவின் கூல் டிரிங்ஸ்-ஐ பார்த்த சிங்கமுத்து போல, நமக்கு கோபம் வரலாம். ஆனால் இரண்டுக்கும் சிறிய ஒற்றுமை இருப்பதை யாராலும் மறுக்க முடியாது என்பதே ரஜினி ரசிகர்களின் வாதம். ரஜினியின் மரண மாஸ் பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் ‘ஷெரிப்’, கமலின் பத்தல பத்தல பாடலுக்கான டான்ஸ் மாஸ்டர் ‘சாண்டி’. அப்படியிருக்க நிச்சயம் இது எதேச்சையாக நடந்தது தான் எனவும் திட்டமிட்டு காப்பியடிக்கப்பட்டிருக்காது எனவும் ஒரு சாரார் கூறிவருகின்றனர்.

ஆனால் இன்னொரு சாராரோ!, எப்படி தேவர் மகன், மகாநதி, அன்பே சிவம் போன்ற படங்கள் எல்லாம் கமல் இயக்கவில்லை என்றாலும் அது கமல் இயக்கிய படமானதோ! அதே போல் சாண்டி மாஸ்டர் நடன இயக்குநராக பணியாற்றினாலும் இது கமல் பாடல் தான் என்று அடித்து கூறுகின்றனர். but, கமல் எதற்கு வேண்டுமென்றே ரஜினி ஸ்டெப்பை பயன்படுத்த வேண்டும் என்ற கேள்விகள் நமக்குள் எழலாம்.

அப்படியே சரித்திரத்தை கொஞ்சம் திரும்பி பார்ப்போம். தன்னுடைய பிறந்தநாள் விழா மேடை ஒன்றில் ரஜினியை வைத்துக்கொண்டு கமல் பேசும் போது..‘எங்களுடைய ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்குறவங்க நாங்க தனியா என்ன பேசிக்குறோம்னு கேட்டா வியந்துபோவாங்க. இருந்தும் நாங்க அப்படியே விட்டு வச்சிருக்கோம். ஏன்னா கால்பந்தாட்டத்துல ரெண்டு கோல் போஸ்ட் இருந்தாதான் ‘மேட்ச்’ சுவாரஸியமா இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

இதை வைத்து பார்க்கும் போது கமல் வேண்டுமென்றே ரஜினி ரசிகர்களை சீண்டும் வகையில் இந்த ‘ஐகானிக் ஸ்டெப்பை’ எடுத்து வைத்திருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது. ரஜினி கமல் ரசிகர்களின் இந்த பாரம்பரிய சண்டையை பார்த்து அஜித்-விஜய் ரசிகர்களே வாயடைத்து போய் உள்ளார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது. விக்ரம் படம் வெளியான பிறது அஜித் – விஜய் ரசிகர்களை ரஜினி-கமல் ரசிகர்கள் ஓரம் கட்டிவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. வரலாறு திரும்புகிறது!

– வேல் பிரசாந்த்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.