திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓராண்டில் நூறாண்டு சாதனைகளை செய்துள்ளதாக புகழாரம் சூட்டினார்.
கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக கொள்கை பரப்பு செயலாளரும், எம்.பியுமான திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, திருச்சி சிவா பேச்சை கேட்டு நாளாகி விட்டதாகவும், அவர் பேச்சைக் கேட்பதற்காக கூட்டத்திற்கு தான் வந்திருப்பதாகவும் கூறினார். முதியவர்களுக்கு வீட்டில் சென்று மருத்துவம் பார்க்கும் வகையில் இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளதாக கூறிய அவர், விபத்தில் சிக்கியவர்களை காக்கும் வகையில் நம்மை காக்கும் 48 திட்டத்தையும் முதலமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார் என்றார்.
எப்போது சென்றாலும் முதலமைச்சர் கோவை மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் தான் கேட்பார் என்றும், எப்போதும் கோவை மாவட்டம் முதலமைச்சர் உள்ளத்தில் இடம் பெற்றிருக்கிறது என்றும் கூறினார். கோவை மாவட்டத்திற்கு ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை திமுக அரசு கொடுத்துள்ளது. ஓராண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூற்றாண்டு சாதனைகளை செய்துள்ளார் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி புகழாரம் சூட்டினார். மேலும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை வழங்கிய முதல்வராக ஸ்டாலின் திகழ்வதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி குறிப்பிட்டார்.