சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஈபிஎஸ் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பெயரைச் சொல்லி ரூ.59 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பெயரைச் சொல்லி சுமார் ரூ.59 லட்சம் மோசடி செய்த கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த திலகவேணி(53) என்ற பெண்ணை அடையார் போலீசார் கைது செய்துள்ளனர்.அதிமுக கூட்டங்களுக்கு சென்று அங்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை வைத்து பல நபர்களிடம் மோசடி செய்துள்ளார்.
தான் அதிமுக கவுன்சிலர் என நம்ப வைத்து பணம் கொடுத்த நபர்களை நேரடியாக தலைமைச் செயலகம் அழைத்துச் சென்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதுவரை 15க்கும் மேற்பட்ட நபர்கள் புகார் அளித்ததன் பேரில் அவர்களிடம் இருந்து மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.59 லட்சம் என அடையாறு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பலரிடம் இதே போல வேலை வாங்கி தருவதாக கூறி இவர் பணம் மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. இதனால் புகார் எண்ணிக்கை அதிகரித்து மோசடி தொகையும் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இவ்வழக்கு குறித்து அடையாறு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







