தமிழ் ஆசிரியரின் புதிய யுக்தியால், தேர்வுகளில் அசத்தும் மாணவர்கள்..!

மாணவர்கள் மனப்பாடம் செய்து படிப்பதை தடுப்பதற்காக, தமிழ் ஆசிரியர் ஒருவர் பாடத்தில் வரும் கதாபாத்திரங்களாக வேடமணிந்து பாடங்களை நடத்தி அப்பள்ளியின் மாணவர்களை கவர்ந்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் , அருகேயுள்ள வெம்பூரில் அரசு…

மாணவர்கள் மனப்பாடம் செய்து படிப்பதை தடுப்பதற்காக, தமிழ் ஆசிரியர் ஒருவர் பாடத்தில் வரும் கதாபாத்திரங்களாக வேடமணிந்து பாடங்களை நடத்தி அப்பள்ளியின் மாணவர்களை கவர்ந்து வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் , அருகேயுள்ள வெம்பூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் துரைப்பாண்டி. ஆசிரியர் துரைப்பாண்டியின் சொந்த ஊர் கயத்தார் அருகேயுள்ள கம்மாப்பட்டி என்றாலும், தற்பொழுது கோவில்பட்டியில் இருந்து தினமும் பள்ளிக்கு சென்று வருகிறார்.

கடந்த 4 ஆண்டுகளாக துரைப்பாண்டி வெம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.சிறுவயதில் இருந்தே சுதந்திர போராட்ட வீரர்கள், வரலாற்று மன்னர்கள் கதைகளை கேட்பதிலும், நாடகங்களை பார்ப்பதிலும் ஆர்வம் கொண்ட துரைப்பாண்டி, அந்த கதையில் வரும் கதை நாயகர்களாக தன்னை ஒப்பனை செய்து நடித்து பார்ப்பது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அந்த ஆர்வத்தினால், பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளார்.

சிறுவயதில் அவரிடம் இருந்த ஆர்வம், துடிப்பு ஆகியவை தான் ஆசிரியராக பொறுப்பு ஏற்றதும், அதனை மாணவ-மாணவிகளின் கற்றலை ஊக்குவிக்கவும், அவர்கள் புரிந்து ஆர்வமுடன் படிப்பதற்கும் பயன்படுத்தி கொண்டார். அந்த வகையில் தமிழ் பாடத்தில் வரக்கூடிய பாடல்கள், வரலாற்று மற்றும் சுதந்திர போராட்ட நாயகர்கள் வேடமணிந்து துரைப்பாண்டி பாடங்களை மாணவர்களுக்கு கற்று தந்து கொண்டு
இருக்கிறார்.

திருவள்ளுவர், வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், வ.உ.சி, ராஜராஜசோழன் என பாடத்தில் வரக்கூடிய முக்கிய தலைவர்களின் வேடங்களை அணிந்தவாறு பாடம் எடுத்து அசத்தி வருகிறார். 2014-ம் ஆண்டு தனது ஆசிரியர் பணியை தொடங்கிய துரைப்பாண்டி வேலூர் அணைக்கட்டு, புதுக்கோட்டை, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பணியாற்றி 4-வது பள்ளியாக வெம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு வேடமணிந்து சென்று மாணவ-மாணவிகள் மத்தியில் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும்படியாக சொல்லி கொடுத்து வருகிறார். வேடமணிய தேவையான பொருள்களுக்காக தனது ஊதியத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி வாங்கி வருகிறார். தொடக்கத்தில் வேடமணியும் போது கொஞ்சம் சிரமப்பட்டு வந்தாலும், துரைப்பாண்டியன் முயற்சிக்கு அப்பள்ளி மற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் உதவி புரிய தொடங்கியுள்ளனர். அவர் வேடம் போடுவதற்கு துணை புரிந்தும் வருகின்றனர்.

ஏதோ வேடம் அணிந்து விட்டோம் என்றில்லாமல், அந்த வேடத்திற்குரிய கம்பீரத்துடன் வகுப்பில் பாடம் நடத்துவதால், மாணவர்களுக்கும் பாடங்களை எளிதில் புரிந்து கொண்டு தேர்வுகளிளிலும் அசத்தி வருகின்றனர். ஆசிரியர் என்ற முகமூடியை நீக்கி விட்டு மாணவர்களுடன் மாணவராக இருந்து, பாடங்களை நடத்துவது மட்டுமின்றி, பாடத்தில் வரும் கதாபாத்திரங்களாக வேடமணிந்து , அந்த பாத்திரமாகவே உருமாறி மாணவர்களின் கல்வி மற்றும் கற்பனை திறனை ஊக்குவித்து வரும் ஆசிரியர் துரைப்பாண்டியன் பணி பாராட்டுக்குரியது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.