ஓர் ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸி., ஓபன், அதைத் தொடர்ந்து பிரெஞ்சு ஓபன் நிறைவடைந்தது. தற்போது விம்பிள்டன் போட்டி நடைபெற்று வருகிறது. அடுத்ததாக அமெரிக்கா ஓபன் போட்டி நடைபெறும். இந்த 4 போட்டித் தொடர்களும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்றவை.
கிராண்ட்ஸ்லாம் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு டென்னிஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் கனவாக இருக்கும்.
தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் போட்டியில், டென்னிஸ் உலகின் முன்னணி வீரரும் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான செர்பியாவின் ஜோகோவிச் உள்ளிட்ட பல வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டமான 4 ஆம் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த வேன் ரிஜ்தோவேனை எதிர்கொண்டார் ஜோகோவிச். முதல் சுற்று ஆட்டத்தில் 6-2 என்ற கணக்கில் எளிய முறையில் ஜோகோவிச் கைப்பற்றினார். எனினும், அடுத்த செட்டை விடாப்பிடியாக மல்லுக்கட்டி வேன் கைப்பற்றினார்.
இதையடுத்து, வீறுகொண்டு எழுந்த ஜோகோவிச் அடுத்த இரண்டு செட்களையும் 6-1, 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி ஆட்டத்தில் வெற்றி பெற்றார். இவ்வாறாக 6-2, 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜோகோவிச், போட்டித் தரவரிசையில் 10ம் இடத்தில் உள்ள இத்தாலி வீரர் ஜே.சின்னரை எதிர்கொள்கிறார். பரபரப்பான இந்த ஆட்டத்திலும் பஞ்சம் இருக்காது.
-மணிகண்டன்








