”ஓட்டல் ஓட்டலா எத்தனை நாளைக்கு சுற்றுவீர்கள்?”- எச்சரித்த ஆதித்யா தாக்ரே

மகாராஷ்டிராவில் சபாநாயகர் தேர்தலில் வாக்களிக்க வந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தனது முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தர்ம சங்கடத்தில் நெளிந்ததாக சிவசேனா தலைவர் பால்தாக்ரேவின் மகன் ஆதித்யா தாக்ரே தெரிவித்தார். மகாராஷ்டிராவில் சிவசேனா…

மகாராஷ்டிராவில் சபாநாயகர் தேர்தலில் வாக்களிக்க வந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தனது முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தர்ம சங்கடத்தில் நெளிந்ததாக சிவசேனா தலைவர் பால்தாக்ரேவின் மகன் ஆதித்யா தாக்ரே தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கொடுத்த நெருக்கடியால் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வதற்கு முதல்நாள் தனது முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்ரே ராஜினாமா செய்தார். இதையடுத்து பாஜகவுடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி பிரிவு கூட்டணி அரசை அமைத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ராகுல் நர்வேகர் வெற்றி பெற்றார். அவருக்கு 164 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து சிவசேனா சார்பில் களம் இறக்கப்பட்ட ராஜன் சால்விக்கு 107 வாக்குகளே கிடைத்தன.

இந்நிலையில் சபாநாயகர் தேர்தல் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆதித்யா தாக்ரே, ஓட்டலிலிருந்து சட்டப்பேரவை வரை அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டதாகக் கூறினார். மும்பையில் இப்படி ஒரு பாதுகாப்பை இதற்கு முன் தான் பார்த்ததில்லை எனக் கூறிய ஆதித்யா தாக்ரே, எம்.எல்.ஏக்கள் யாரேனும் தப்பிச் சென்று விடுவார்களோ என்கிற பயத்திலா இவ்வளவு பாதுகாப்பு என கேள்வி எழுப்பினார்.

இன்று சட்டப்பேரவைக்கு வந்த எம்.எல்.ஏக்கள் தனது முகத்தை நேருக்கு நேர் பார்த்து பேச முடியாமல் தர்மசங்கடத்தில் நெளிந்ததாகவும்  ஆதித்யா தாக்ரே தெரிவித்தார். ஓட்டல் ஓட்டலாக அவர்கள் எவ்வளவு நாள் சுற்ற முடியும் என்று கேள்வி எழுப்பிய ஆதித்யா தாக்ரே,  ஒரு நாள் அவர்கள் தங்கள் தொகுதி பக்கம் போய்தான் வேண்டும் என்றார். அப்போது அவர்கள் மக்களை எப்படி சந்திக்க முடியும் என்றும் ஆதித்யா தாக்ரே கேள்வி எழுப்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.