அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வெளிமுகமை மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதற்கான பணிகளைத் தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நகராட்சி நிர்வாகத் துறை, மின்சார வாரியம் என ஒவ்வொரு துறையாக வெளிமுகமையின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்கு எழுந்துவரும் எதிர்ப்புகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய தமிழக அரசு, அதற்கு மாறாக, ஒட்டுமொத்த அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
தேர்தலுக்கு முன்பாக, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளித்த தவெக, ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களாகியும் அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரந்தரமாக நிரப்புவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அதற்கு மாறாக, அனைத்துத் துறைகளிலும் தனியார்மயத்தைப் புகுத்தி, வெளிமுகமையின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க முயல்வது, தேர்தல் வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணானதோடு, வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர்களுக்கும், பணி நிரந்தரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்.
அரசுப் பணிகளில் நிரந்தர நியமனங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக, ஒப்பந்த முறையை அனைத்துத் துறைகளிலும் விரிவுபடுத்துவது ஊழியர்களின் பணிப் பாதுகாப்பைப் பறிப்பதுடன்,அரசுப் பணிகளுக்காகப் பல ஆண்டுகளாகத் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும். இவ்வாறு அரசின் நிர்வாகப் பொறுப்புகளை வெளிமுகமையிடம் ஒப்படைத்து, நிரந்தர வேலைவாய்ப்புகளைச் சுருக்குவது ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் தனியாரிடம் அடகு வைக்கும் செயலாகும்.
எனவே, தமிழக அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாகக் கணக்கெடுத்து, அவற்றை நிரப்புவதற்கான அறிவிப்புகளை உரிய காலத்தில் வெளியிட்டு, தகுதியான நபர்களை வெளிப்படையான தேர்வு முறையின் மூலம் நிரந்தரமாக நியமிக்கத் தேவையான நடவடிக்கைகளைத் தவெக அரசு உடனடியாக மேற்கொள்வதோடு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வது தொடர்பாகத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




