தமிழ் மாநில காங்கிரஸுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்குமா?

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மனுவை முன்னுரிமை அளித்து தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. …

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மனுவை முன்னுரிமை அளித்து தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இது தொடர்பாக அவர் அளித்த மனுவில்,  எதிர்வரும் மக்களவை தேர்தலில் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி கடந்த 6ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்ததாக கூறியிருந்தார்.

அடுத்த 4 வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கலாம் என்ற நிலையில்,  தங்களது மனுவிற்கு இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  மேலும், கடந்த 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலை போல இந்த தேர்தலிலும் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர் ஜி.கே.வாசன் தாக்கல் மனுவுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.  இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது.

அப்போது,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது குறித்து மக்களவை பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக முடிவு செய்யப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மனுவை முன்னுரிமை அளித்து தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்க உத்தரவிட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.