அரசியல் ஆர்வம் அதிகம் கொண்டவர்கள் தமிழ்நாட்டு மக்கள். இதனால் அவர்களிடம் இந்தக் கேள்வி இயல்பாக எழுகிறது. அதுவும் அரசியல் அதிகார மாற்றங்களுக்கு மத்தியில் தமிழ்நாட்டில், அவ்வப்போது நடைபெற்று வரும் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகளைக் கண்டு வரும் விளையாட்டுத் துறை ஜாம்பவான்களுக்கும் ஆர்வலர்களுக்கும் இந்தக் கேள்வி எழுந்து கொண்டே இருப்பது இயல்புதான்.
அண்மையில் தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தி முடித்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை, ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே சர்ச்சையாக்கியது இதற்கு சிறந்த உதாரணம். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கும், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் வித்தியாசம் தெரியாமல் இரண்டுக்கும் செலவழிக்கப்படும் தொகை குறித்து திமுக இணையவாசிகள் சண்டை போட்டுக் கொண்டது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது.
இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள, சென்னை ஓபன் மகளிர் போட்டியை ஒட்டியும் தற்போது வாதப் பிரதிவாதங்கள் தொடங்கி விட்டன. ஜெயலலிதா ஆட்சிக் காலம்தான் விளையாட்டுத் துறையின் பொற்காலம் என அதிமுகவினரும், சர்வதேச அளவில் தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகளை மிகச் சிறப்பாக நடத்துவது திமுக அரசுதான் என்றும் இரண்டு திராவிட கட்சிகளைச் சேர்ந்த இணையவாசிகளும் முட்டிக் கொள்கின்றனர்.
போதுமான வரவேற்பின்றியே, சென்னை ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டி தமிழகத்தை விட்டுச் சென்றது. தற்போது மீண்டும் சென்னைக்கு மகளிர் டென்னிஸ் போட்டியை திமுக அரசு கொண்டு வந்துள்ளது. இருப்பினும், மகளிர் டென்னிஸ் போட்டிக்கு வரவேற்பு எப்படி இருக்கும்? வரவேற்பு குறைவால் மீண்டும் சென்னை ஓபன் கைகழுவப்படுமா? என்ற ஐயம் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்கிறது.
மகளிர் விளையாடுவதால் மட்டுமே, சென்னை ஓபன் போட்டிக்கு மசுவு கூடிவிடாது என விளையாட்டு ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஒரு சில ஆண்டுகளுக்கு வேண்டுமானால் ஈர்ப்பு இருக்கலாம், அதுவும் தற்போது டிவியில் கண்டுகளிக்கப்படுவதால், போட்டியை நேரடியாக வந்து ரசிப்பவர்களின் எண்ணிக்கை குறையும் போது, ஆடவர் போட்டிக்கு ஏற்பட்ட பின்னைடைவு போன்றே மகளிர் போட்டிக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது என அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றர்.
இதைத் தாண்டி, டென்னிஸ் துறை நிபுணர்கள் வேறு கோணத்தில் இந்தப் போட்டிக்கான எதிர்காலத்தை கணிக்கின்றனர். சென்னை ஓபனில் வெற்றி பெறுபவர்களுக்கு 250 புள்ளிகள் மட்டுமே வழங்கப்படும். 250 புள்ளிகள் கொண்ட போட்டிக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை குறைவு என்பதால், தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் முன்னணி வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்பது அரிதிலும் அரிது. இதே காரணம்தான் ஆடவர் டென்னிஸ் போட்டியிலும் எதிரொலித்தது. வாவிங்கா போன்ற ஒரு சில பிரபல வீரர்களைத் தவிர்த்து முன்னணி டென்னிஸ் வீரர்கள் சென்னை ஓபனில் பங்கேற்காததால், அந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு குறைந்து நாளடைவில் அந்தப் போட்டியே கைவிடப்பட்டது. அதே நிலை ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால் சில ஆலோசனைகளை டென்னிஸ் நிபுணர்கள் முன் வைக்கின்றனர்.
முதலாவது, Guarantee Money வாய்ப்பை முறையாக பயன்படுத்த வேண்டும் என அவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர். முன்னணி வீரர்கள் பங்கேற்க ஒரு கணிசமான தொகை அந்த வீரர்களுக்கு வழங்கப்படுவது வழக்கமானதுதான். போட்டி ஏற்பாட்டாளர்களுக்கும் சம்பந்தப்பட்ட வீரர்களுக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் செய்து கொள்ளப்படும் இந்த ஒப்பந்தத்தில், எவ்வளவு தொகை என்பது வெளியில் தெரியாது. Guarantee Money-க்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் வெற்றிபெற்றால், அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையும் அவருக்கு கிடைக்கும். தொகை கணிசமாக இருப்பதால் அரசுதான் இதற்கு உதவ வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது, போட்டியின் தரத்தை 250 புள்ளிகளிலிருந்து 500 புள்ளிக்கு தரம் உயர்த்த வேண்டும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். 250 புள்ளிகளைப் பெறுவதற்காக ஏன் முன்னணி வீரர்கள் இங்கு வந்து விளையாடப் போகின்றனர்? தரவரிசையை உயர்த்திக் கொள்ள விரும்பும், அப்படிப்பட்ட வாய்ப்புகளைத் தவறவிடாத, தரவரிசையில் பின்தங்கியுள்ள வீரர்கள்தான் இது போன்ற போட்டிகளில் களமிறங்குவர். தரப்புள்ளி 500 எனும்போது, அதற்கேற்ற பரிசுத்தொகையும் கூடுவதால் முன்னணி வீரர்கள் முண்டியடித்துக் கொண்டு வர வாய்ப்புள்ளது.
அதேசமயம், 500 தரப் புள்ளிகளைக் கொண்ட போட்டிகளை நடத்துவதற்கு பரிசுத் தொகையை அதிகரிக்க வேண்டும். அதற்கும் அரசுதான் உதவ வேண்டும். எப்படியிருப்பினும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெறும் டென்னிஸ் போட்டிக்கு ரசிகர்களை வரவழைக்கவும் தக்க வைக்கவும் டென்னிஸ் போட்டியையும் தாண்டி மெனக்கெட வேண்டும். அதற்கு தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் என்ன செய்யப் போகிறது? என்ற கேள்வியும் எழாமலில்லை.
வழக்கம் போல ஜனவரியின் ரம்மியமான வானிலையில் போட்டியை நடத்தும் வகையில் போட்டி அட்டவணையை மாற்ற வேண்டும். வெயிலின் உக்கிரம் இரவிலும் தொடர்வது வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு சென்னையை அந்நியப்படுத்தி விடும்.









