“அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் தவெக அரசு அலட்சியம் காட்டக் கூடாது” – நயினார் நாகேந்திரன்!

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் தவெக அரசு அலட்சியம் காட்டக் கூடாது என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதில், “தமிழகத்தின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்று 2 மாதங்கள் கடந்த பிறகும் கூட அரசு வழக்கறிஞர்களின் நியமனங்களுக்கான அரசாணை இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை எனவும், இதனால் ஜாமீன், முன்ஜாமீன் உள்ளிட்ட மனுக்களின் மீதான விசாரணைகள் தடைபடுவதாகவும், மேலும் பெரும்பாலான கீழமை நீதிமன்றங்களில் நூற்றுக்கணக்கான வழக்குகள் தேக்கமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சிகரமான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருவது, தவெக அரசின் நிர்வாகக் குளறுபடிகளுக்கான மற்றொரு சான்று.

அதிலும் குறிப்பாக, “அரசு வழக்கறிஞர்களுக்கான GO – வையே நாங்கள் தற்போது தான் வெளியிட ஆரம்பித்துள்ளோம்” என சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்களே பொதுவெளியில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது பல்வேறு சந்தேகங்களையும் குழப்பங்களையும் எழுப்புகிறது. அரசு வழக்கறிஞர்களின் நியமனம் ஆமை வேகத்தில் நடப்பதன் பின்னணி என்ன? விண்ணப்பித்த வழக்கறிஞர்களை வடிகட்டுவதில் ஏதேனும் முறைகேடுகள் நடக்கின்றனவா? புதிய அரசு வழக்கறிஞர்களின் நியமனம் தாமதமாகிறது என தெரிந்த பின்பும் கூட, ஏற்கனவே பணியில் இருந்த அரசு வழக்கறிஞர்களுக்கு கால நீட்டிப்பு வழங்காதது ஏன்? தமிழகத்தின் அரசு இயந்திரத்தையே சிக்கலுக்குள் தள்ளும் இந்த விவகாரத்தை ஆளும் அரசு எதற்கு இத்தனை அலட்சியமாகக் கையாள்கிறது? உள்ளிட்ட மக்களின் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது முதல்வரின் தார்மீக கடமை.

அதுமட்டுமன்றி, அரசு வழக்கறிஞர்களை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை, எளிய மக்களின் சட்டப் பாதுகாப்பிற்கும் முதல்வர் மட்டுமே முதல் பொறுப்பு. எனவே, அரசு வழக்கறிஞர்களின் நியமனத்தில் உள்ள தடைகள் என்னவென்பதை முறையாக ஆராய்ந்து, எவ்வித சமரசமுமின்றி அரசு வழக்கறிஞர்கள் உடனடியாக நியமிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.