பலன் தருமா பான் இந்தியா படங்கள்?

பாகுபலி, கே.ஜி.எஃப் படங்களின் பிரமாண்ட வெற்றி, இந்திய சினிமாவில் புதிய பாதையை வகுத்திருக்கிறது. ஒரு திரைப்படம், பல மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாவது அதிகரித்து வருகிறது. அப்படி உருவாகும் பான் இந்தியா திரைப்படங்கள் திரைத்…

பாகுபலி, கே.ஜி.எஃப் படங்களின் பிரமாண்ட வெற்றி, இந்திய சினிமாவில் புதிய பாதையை வகுத்திருக்கிறது. ஒரு திரைப்படம், பல மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாவது அதிகரித்து வருகிறது. அப்படி உருவாகும் பான் இந்தியா திரைப்படங்கள் திரைத் துறைக்கு பலன் தருமா? என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஒரு மொழியில் உருவாகி வெற்றி பெறும் படங்கள், பிற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுவது வழக்கமான நடைமுறை. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால் உட்பட முன்னணி ஹீரோக்களின் படங்கள் இப்படி மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது, ராஜமவுலியின் பிரமாண்ட படைப்பான ’பாகுபலி’. இந்தப் படமும் இதன் அடுத்த பாகமாக வெளியான ’பாகுபலி 2’ படமும் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை தன் பக்கம் இழுத்தது. இந்திய ரசிகர்கள், அந்தக் கதையோடு தங்களை இணைத்துக் கொண்டதால், படம் மெகா வெற்றி பெற்றது. எந்த தென்னிந்திய படங்களுக்கும் கிடைக்காத வசூலையும் ’பாகுபலி’ அள்ளியது.

அதிக பட்ஜெட்டில் உருவான இந்தப் படங்கள், சினிமா வியாபாரத்தில், புதிய பாதையை கொடுத்த நேரத்தில், கன்னட ஹீரோ யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பெரும் வரவேற்பை பெற்றன. யினரை இந்தியா முழுவதுக்குமான முக்கிய மொழிகளில் ஒரே படத்தை ஒரே நேரத்தில் உருவாக்கி வெளியிடும் முயற்சி தீவிரம் அடைந்துள்ளது.

இப்போது, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், விக்ரம் நடிக்கும் கோப்ரா, ராஜமவுலி இயக்கி வரும், ரத்தம் ரணம் ரெளத்திரம், பிரசாந்த் நீல் இயக்கும், கே.ஜி.எப்: சாப்டர் 2, ஷங்கர் இயக்கும் இந்தியன் 2, ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்க இருக்கும் படம், பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ராதே ஷ்யாம், சலார், ஆதிபுருஷ், உட்பட பல படங்கள், பான் இந்தியா முறையில் பல மொழிகளில் உருவாகி வருகின்றன.

இந்த வகை, பான் இந்தியா படங்களில் மற்ற மொழி நடிகர், நடிகைகளை மெயின் கேரக்டர்களிலோ, சிறப்பு தோற்றத்திலோ நடிக்க வைப்பது வழக்கம். ராஜமவுலியின் ’ரத்தம் ரணம் ரெளத்திரம்’ படத்தில், இந்தி ஹீரோ அஜய் தேவ்கன், நடிகை ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி முக்கிய தோற்றத்தில் நடிக்கிறார்கள். ’கே.ஜி.எஃப்: சாப்டர் 2’ படத்தில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் வில்லனாகவும் நடிகை ரவீணா டாண்டன் அரசியல்வாதியாகவும் நடிக்கிறார்கள்.

ஆனால், அனைவரும் விரும்பக் கூடிய வகையிலான கதைகளில் கவனம் செலுத்தாமல் பான் இந்தியா முறையில் படங்களை உருவாக்குவது சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார் வசனகர்த்தாவும் எழுத்தாளருமான அஜயன் பாலா. ’பான் இந்தியா முறை என்பது புதிதில்லை. ஏற்கனவே மல்டிலிங்குவல் என்ற பெயரில் அப்படித்தான் சில படங்கள் எடுக்கப்பட்டு வந்தன என்று கூறும் அவர், மணிரத்னம் இயக்கிய ரோஜா உள்ளிட்ட தேசபக்தியை வெளிபடுத்திய பல படங்கள் அந்த வகையில் எடுக்கப்பட்டவைதான் என்கிறார்.

‘பிரபுதேவா, ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உருவான ’மிஸ்டர் ரோமியோ’ உட்பட சில மல்டிலிங்குவல் படங்கள் பெரும் தோல்வியை சந்தித்த பிறகு, அந்த வகை படங்களை, அதிக பட்ஜெட்டில் உருவாக்குவது குறையத் தொடங்கியது’’ என்கிறார் அஜயன் பாலா.

கடந்த 2019 ஆம் ஆண்டு, பிரபாஸ் நடிப்பில் வெளியான ’சாஹோ’, சிரஞ்சீவி, நயன்தாரா, விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் உருவான ’சைரா நரசிம்மா ரெட்டி’ ஆகிய படங்கள் அதிக பட்ஜெட்டில் உருவாகி, பெரிய வரவேற்பில்லாமல் போனதையும் சில தயாரிப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ’பான் இந்தியா திரைப்படங்களை கவனமாகக் கையாள வேண்டும் என்றும் அதில் அதிக ஆபத்து இருக்கிறது’ என்றும் எச்சரிக்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.