தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று, ஜெயலலிதா ஆட்சி அமைப்போம் என சட்டப் பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த ஆட்சி 3 மாதம் தான் இருக்கும், 6 மாதம்தான் இருக்கும் என எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்பி வந்த நிலையில், வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்தார். அதிமுக அரசு நாட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றதால், வெற்றிநடை போடும் தமிழகம் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
50 ஆண்டுகாலம் தீர்க்கப்படாமல் இருந்த காவிரி நதிநீர் பிரச்சனையை, சட்டப் பூர்வமாக தீர்ப்பப் பெற்று தீர்த்து வைத்தது ஜெயலலிதாவின் அரசு தான் என்றும், எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்து ஜெயலலிதாவின் கனவை நனவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார். முன்னதாக பேசிய சட்டப்பேரவை தலைவர் தனபால், 15-வது சட்டப்பேரவையில் அதிக கேள்வி எழுப்பிய எம்.எல்.ஏ.க்களில் கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபு முதலிடத்திலும், திமுக எம்எல்ஏ மஸ்தான் இரண்டாம் இடத்திலும் இருப்பதாக தெரிவித்தார். அதிகபட்சமாக அமைச்சர் தங்கமணி 102 வினாக்களுக்கு பதிலளித்து முதலிடத்திலும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 97 வினாக்களுக்கு பதிலளித்து இரண்டாம் இடத்திலும் இருப்பதாக தெரிவித்தார்.
3-வதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 79 வினாக்களுக்கு பதிலளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். சட்டப்பேரவை வரலாற்றிலேயே, விடுமுறை எடுக்காமல், அனைத்து நாட்களும் பேரவைக்கு வருகை புரிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும் சட்டப்பேரவை தலைவர் தனபால் புகழாரம் சூட்டினார்.







