கட்டுரைகள்

உணவு பஞ்சத்தைப் போக்குமா வடகொரியா?


சி.பிரபாகரன்

கட்டுரையாளர்

கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகள் பல பிரச்னைகளை சந்தித்து வரும் நிலையில், “எங்கள் நாட்டில் ‘பூஜ்ஜியம்’ கொரோனா தொற்று” என கணக்கு காட்டியுள்ள நாடு ஒன்று, புதிய பொருளாதார பிரச்னைகளை தற்போது சந்தித்து வருகிறது. “ஹெர்மிட் ராஜ்ஜியம்” என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் வடகொரியாதான் அது.

கடந்த 7 ஆண்டுகளாக அதிபர் கிம் ஜாங் உன் வடகொரியாவை ஆட்சி செய்து வருகிறார். கிம் ஜாங் உன் ஒரு சர்வாதிகாரி, மக்களைக் கொடுமைப்படுத்துவார், தனக்கு பிடிக்காதவர்களைக் கொல்வார், அண்டை நாடுகளை அச்சுறுத்துவார் என தொடர்ந்து அவர் மீது பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இருப்பினும், இதுபோன்ற விமர்சனங்கள் சரியா, தவறா? என்று, எவரும் அந்நாட்டினுள் சென்று சரிபார்க்க இயலாத நிலைதான், இன்றளவும் வடகொரியாவை சுற்றி நிலவி வருகிறது.

அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் வடகொரியா, தற்போது உள்நாட்டு பிரச்னை ஒன்றினை உலகமறிய செய்திருக்கிறது. வடகொரியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். “1994 முதல் 1998ம் ஆண்டு வரை நம் நாட்டில் ஏற்பட்ட உணவுப்பஞ்சத்தை போல, மீண்டும் ஒரு வரலாற்று உணவுப்பஞ்சத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும்” என, நாட்டு மக்களிடம் அவர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

கிம் ஜாங் உன்

வடகொரியாவில் உணவுப்பஞ்சம் ஏற்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதில் கொரோனா பரவலே முதன்மையானதாக கருதப்படுகிறது. உணவு, உரம், எரிபொருளுக்கு வடகொரியா முற்றிலுமாக, தனது நட்பு நாடான சீனாவையே நம்பியுள்ளது. எனினும், கொரோனா பரவலைத் தொடந்து, வடகொரியா தனது நாட்டின் எல்லைகளை முற்றிலுமாக மூடியது. சீனாவுடனான வர்த்தக தொடர்பையும் நிறுத்தியது. இதனாலேயே தற்போது பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த 2020ஆம் ஆண்டு 5 புயல்களால் ஏற்பட்ட சேதமும் உணவு பஞ்சத்திற்கு காரணமாக, அதிபர் கிம் ஜாங் உன்-னால் முன்வைக்கப்படுகிறது. இந்த உணவுப் பஞ்சத்தினால் 1 கிலோ வாழைப்பழம் 3500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், அதனை வாங்கி சாப்பிட கூட வழியில்லாத மக்கள், தங்களின் ஒரு வேலை உணவை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், வடகொரியா ஒரு பெரும் உணவு பஞ்சத்தை சந்திக்க நேரிடும் என, 2018 ஆண்டிலேயே ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, அந்நாட்டை எச்சரித்திருந்தது. உணவுத் தேவைகளுக்காக, வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்கும் 40 நாடுகளில், வடகொரியாவும் அடக்கம் என 2018ல் ஐ.நா அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. வெளிநாடுகளுடன் வர்த்தகப்போக்கு இல்லாமை, ஒழுங்கற்ற பருவ மழை, சாதகமற்ற வானிலை, குறைந்த நீர்ப்பாசன விநியோகம் போன்ற பல்வேறு காரணங்களால் வடகொரியாவில் உணவு பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், வானிலையும் பருவநிலை மாற்றமும் மட்டுமே காரணமா என்றால் “இல்லை”.

பொதுவாகவே, சீனா போன்ற சில நாடுகளை தவிர்த்து, மற்ற உலக நாடுகளுடன் வடகொரியா வர்த்தக தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பவில்லை. உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு போன்ற எந்த உலக அமைப்புடனும் தன்னை இணைத்துக் கொள்ளாமல், சொந்த நாட்டிலுள்ள வளங்களை மட்டுமே வைத்து, தனித்தே தனது நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்க நினைத்தார் அதிபர் கிம். மேலும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை அதிபர் கிம் நடத்திய நிலையில், வடகொரியாவை, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என, பொருளாதார தடையையும் விதித்தது ஐ.நா. எனினும், இதற்கு வடகொரிய அதிபர் கிம் பெரும் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் அதுவே பின்னாளில் வட கொரியாவிற்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. வடகொரியாவின் இன்றைய மோசமான பொருளாதார நிலைக்கு, தன்னை வர்த்தகத்தில் ஈடுபடுத்திக் கொள்ளாததும், உள்நாட்டு உற்பத்திகளை, பிற நாடுகளுக்கு சந்தைப்படுத்தாமல் இருந்ததுமே முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

உலகமயமாக்கல் என்ற ஒன்று, உலகம் முழுவதும் பரவிய நிலையில் தொழில் முனைவோர்கள் பல்வேறு நாடுகளில் முதலீடு செய்வதன் மூலம், இரு வேறு நாட்டினருக்கு இடையேயான வர்த்தகம் என்பது அதிகரித்தது. இந்த வர்த்தகமானது அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகவும் கைகொடுத்தது. சுவிட்சர்லாந்து, ஜப்பான் போன்ற வளங்கள் குறைந்த நாடுகள், பொருளாதார வளர்ச்சி அடைய வர்த்தக, வணிக பரிமாற்றம் மட்டுமே பெரும் உதவியாக இருந்தது.

இதுபோன்ற ஆரோக்கியமான, பலவகை வணிக சந்தைகளைப் பயன்படுத்திக்கொள்ளாமல், தனது வர்த்தக கதவுகளை அடைத்து, தன்னிடமுள்ள வளத்தை மட்டுமே நம்பி, தன் பொருளாதாரத்தை தானே பார்த்துக்கொள்ள நினைத்தது தான் “வெனிசுலா” போன்ற நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. வெவ்வேறு வளங்களை வணிகங்களாக ஒரு நாட்டில் ஈடுபடுத்தும்போதுதான், அந்த நாட்டில் தொழில் வளர்ச்சியும், தொழிலாளர் வளர்ச்சியும் பெருகுகிறது. மேலும் இது நுகர்வோரை, ஒரே வளத்தை நம்பி இல்லாமல், தங்களுக்குத் தேவையானதை சுதந்திரமாக தேர்வு செய்ய வழிவகை செய்கிறது. இது ஒரு சர்வாதிகாரத்தை உடைக்கும் போக்கையும் உருவாக்கும் என்பதாலே, இன்றுள்ள சர்வாதிகார நாடுகள் இதனை பின்பற்றுவதில்லை. ஆனால் அதுவே அவர்கள் பொருளாதாரத்தின் மேல் இடியாக இறங்குகிறது என்பதை, பின்னாளில்தான் புரிந்து கொள்கிறார்கள்.

அதுமட்டுமல்லாது, ஒரு நாட்டிலுள்ள பல்வேறு வகையான மாறுபட்ட வர்த்தக பரிமாற்றம், அந்நாட்டு மக்களின் திறன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அமைகிறது. அதாவது, புதுபுது வர்த்தக முதலீடுகள், தங்கள் நாட்டிற்குள் வருவதன் மூலம், புதுப்புது தொழில்நுட்ப முறைகளை பல வடிவங்களாக அந்நாட்டு மக்கள் கற்றுக்கொண்டு, அதன் மூலம் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு. வட கொரியா போன்ற நாடுகள் வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளாமல், தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது போன்ற செயல்களால், தன் நாட்டின் மக்களிடையே உளவியல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவது மட்டுமல்லாமல், திறன் குறைந்த தொழிலாளர்களையே உருவாக்கவும் வழிவகை செய்கிறது.

எழுத்தாளர் மேட் ராட்லியின் “ரேஷனல் ஆப்டிமிஸ்ட்” என்ற புத்தகம் இதனை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறது. மனிதன் தோன்றிய காலத்தில் வெவ்வேறு நிலப்பரப்புகளுக்கு சென்ற மக்களே, தங்கள் வர்த்தகம் மூலம் வாழ்வாதார நிலையை மேம்படுத்திக் கொண்டுள்ளனர் என்றும், வெளி உலகத்தொடர்பில்லாமல், தனித்து வாழ்ந்த மக்கள், தங்கள் அடிப்படைத் திறன்களை இழந்தது மட்டுமல்லாமல், உடல்நலக் குறைவு பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடுகிறது என்று அவர் அப்புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

உதாரணத்திற்கு, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியான டாஸ்மானியா, பெரும் நீர்நிலை ஒன்றினால் பிரிக்கப்பட்டு, பின் டாஸ்மானியா தீவாக உருவானது. அதுவரை ஆஸ்திரேலியாவுடன் ஒன்றி வாழ்ந்த டாஸ்மானியா மக்கள், தீவாக பிரிந்தப்பின் தனித்து வாழ நேரிட்டது. சில வருடங்களுக்குப்பின் ஐரோப்பியர்கள் டாஸ்மானியா தீவினை அடைந்தபோது, அத்தீவின் மக்கள், முன்பு இருந்ததுபோல் இல்லாமல், உணவு உற்பத்தி செய்வது, ஈட்டி, பூமராங் ஆகிய வேட்டை ஆயுதங்கள் தயாரிப்பது போன்ற அடிப்படை திறன்கள் அனைத்தும் குறைந்தே காணப்பட்டனர் என மேட் ராட்லி தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

டாஸ்மானியா மக்கள்

மக்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவராக ஒன்றி வாழ வேண்டுமென்பதே, இந்த இயற்கையின் நியதி. அதுமட்டுமல்லாது எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பது, ஒரு நாட்டில் வாழும் ஒரு தனி மனிதனின் சுதந்திரம். ஒரு தனி மனித சுதந்திரத்தை கட்டிப்போடும் வகையான எந்த ஒரு சர்வாதிகாரமும், அழிவை நோக்கியே செல்லும் என்பது, காலம் நமக்கு கற்றுக்கொடுத்த பாடம். பல உலகப் போர்களை கடந்து, எந்த நாடும் எந்த நாட்டிற்கும் அடிமை இல்லை என்ற ஒற்றுமையை, பல காலமாக பல நாடுகள் நிலைநாட்டி வருகின்றன. இந்த ஒற்றுமைக்கு, நாடுகளுக்கு இடையேயான பல வர்த்தக ரீதியான ஒப்பந்தங்கள் காரணமாக அமைகின்றன. வடகொரிய அதிபர் கிம் தனது அணு ஆயுத சோதனைகளில் வெளிப்படைத்தன்மை கொண்டால் மட்டுமே, ஐ.நா பொருளாதார தடையை நீக்கும் என்றும், வடகொரியா தன்னை உலக வங்கி, உலக பொருளாதார அமைப்பு போன்றவற்றோடு இணைத்துக்கொண்டு தனது நாட்டிற்கான தொழில் வளர்ச்சியில் ஈடுபட்டால் மட்டுமே, இது போன்ற பொருளாதார மற்றும் உணவு பஞ்சத்திலிருந்து தப்பிக்க இயலும் என்று “ஹெர்மிட் ராஜ்ஜியம் முதல் வணிகத்திற்கான திறப்பு வரை – வட கொரியாவின் பொருளாதார வரைபடம்” என்ற ஆய்வறிக்கையில் ‘ரேண்ட் ஆராய்ச்சி நிறுவனம்’ குறிப்பிட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மருத்துவமனையில் அரங்கேறிய காட்சி- வந்தார் சசிகலா… வெளியேறிய இபிஎஸ்

Gayathri Venkatesan

அஜித் சொன்ன அந்த 3 வது பக்கம்..!

Gayathri Venkatesan

சரித்திரம் பேசும் சத்துணவுத் திட்டம்

Ezhilarasan