மணச்சநல்லூர் கோயிலை புதுப்பிக்க கோரிய வழக்கு: அறநிலையத் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு!

மணச்சநல்லூர் கைலாசநாதர் கோயிலை பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிய வழக்கில், இந்து அறநிலையத் துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பழனி நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத்…

மணச்சநல்லூர் கைலாசநாதர் கோயிலை பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிய வழக்கில், இந்து அறநிலையத் துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பழனி நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், திருச்சி மண்ணச்சநல்லூர் தாலுகா திருப்பட்டூர் கைலாசநாதர் கோவில் பல்லவ மன்னரான ராஜசிம்மா காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு சிறந்த மண்டபங்களும் தரை தளமும், சுற்றுச் சுவரும் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள சிலைகள், நமது பாரம்பரியத்தையும், கலையையும் பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், கோயில் சுவர்களும் மண்டபமும், சிலைகளும் சிதிலமடைந்துள்ளன. இந்த கோவிலானது ஒரு வழி பாட்டுத்தலம் மட்டுமல்ல, நமது பாரம்பரியம், கலை, பண்பாடு, போன்றவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் உள்ளது. இந்த கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கூறி யிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி மற்றும் மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி சிவஞானம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ’கோவிலைப் புனரமைப்பது குறித்து மாவட்ட அளவிலான குழு மற்றும் மாநில அளவிலான குழு ஆய்வு செய்துள்ளது, உயர்மட்ட குழு ஆய்வு செய்வதற்காக காத்திருப்பில் உள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 3 வாரத்திற்குள் தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.