இயக்குநர் வெற்றிமாறன் கதை வசனத்தில், ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்துக்கு ’அதிகாரம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் தயாரித்து, இயக்குநராக அறிமுகமாகும் படம் ’ருத்ரன்’. இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்தப் படத்தில், சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில், இதன் ஷூட்டிங் அடுத்த மாதம் மீண்டும் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில், எஸ்.கதிரேசன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ’அதிகாரம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இயக்குநர் வெற்றிமாறன், கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். அவருடைய கிராஸ் ரூட்ஸ் பிலிம் கம்பெனி இணைந்து தயாரிக்கிறது. துரை செந்தில் குமார் இயக்குகிறார்.
இவர், எதிர் நீச்சல், காக்கிசட்டை, கொடி, பட்டாஸ் படங்களை இயக்கியவர். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.







