திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு நேரடி ரயில் தடம் அமைக்கப்படுமா? அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

திண்டுக்கல்லில் இருந்து சபரிமலை கோயிலுக்கு நேரடியான ரயில் தடம் அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த 1 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மக்களவையில் திண்டுக்கல் முதல் சபரிமலை வரை புதிய ரயில் பாதை அமைக்கப்படுமா என்பது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.

மக்களவையில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் உரையாற்றியபோது, “தேனி தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக யார் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் கேட்கும் கேள்வி திண்டுக்கல்லில் இருந்து சபரிமலை கோயிலுக்கு நேரடியான ரயில் தடம் அமைக்கப்படுமா? இல்லையா? என்பதுதான்.

காரணம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடிக்கும் அதிகமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்கிறார்கள். மாதம் ஒருமுறை 5 லட்சம் பக்தர்கள் செல்கிறார்கள். எனவே திண்டுக்கல் முதல் சபரிமலை லோயர் கேம்ப் முதல் புதிய ரயில் பாதை வழங்கப்பட்டால் பெரும்பாலான மக்கள் பலன் பெறுவார்கள் என கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதில் அளித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “மூன்று நாட்களுக்கு முன்பு இதே கோரிக்கையுடன் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளை கேட்டுக் கொண்டிருப்பதாகவும், அதிகாரிகள் அறிக்கை கொடுத்த பின் இது சம்பந்தமான அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.